இலங்கைக் கடலில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி: வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு! – ஜனாதிபதியுடன் பேச்சுக்கு கோரிக்கை.

வடக்கு கடலில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் இலங்கை அரசின் திட்டத்தை வடக்கு மீனவர்கள் அடியோடு நிராகரித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ள அவர்கள், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று ஒன்றுகூடிப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சின் முடிவிலேயே ஜனாதிபதியை சந்திப்பதற்கான கடிதம் ஒன்று வரையப்பட்டது.

அந்தக் கடிதத்தில்,

“கடந்த பல வருடங்களாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகத் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக வடக்கு கடற்றொழில் சமூகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. நல்லாட்சிக்காலத்தில் நீங்கள் (ரணில் விக்கிரமசிங்க) பிரதமராகப் பதவி வகித்த போது – 2016 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சு மட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட பேச்சில் எட்டப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன்கொண்டு சென்று நிரந்தரத் தீர்வை வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதி வழங்குவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். இது வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இழுவைப் படகுகளால் எங்களுடைய கடல் வளமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபா சொத்துக்களும் இழக்கப்பட்டுள்ளன.

எமது கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக தங்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக உள்ளோம்.

இலங்கையின் இறைமைக்குட்பட்ட கடற்பகுதியில் வெளிநாட்டு கடற்றொழிலாளர்களை அனுமதிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.