இராவண தேசத்தவனை நேசித்த இரும்பு பெண் இந்திராவின் முற்று பெறாத , முதல் காதல் ….

 

இலங்கையரை காதலித்த இந்திரா
காதலி இறந்ததே அறியாது மரணித்த காதலன்
மனதை வருடும் இன்னொரு காதல் கதை

இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தியின் முதல் காதலன் ஒரு இலங்கையர் என யாருக்காவது தெரியுமா?

இவர்களது காதல் மட்டும் கைகூடியிருந்தால் இந்தியாவினது மட்டுமல்ல, இலங்கையினதும் தலைவிதி வேறு விதமாக மாறியிருக்கலாம்.

1933 வருடத்தில் இந்தியாவை போலவே, இலங்கையிலும் தேசிய போராட்டங்கள் நிறைந்த காலமாக கோலோச்சியிருந்தது.

இந்தியர்களும், இலங்கையரும் தமது வேர்களை ஊன்ற வைக்க போராட்ட களத்தில் இறங்கியிருந்தனர். எனவே இந்தியாவோடு, இலங்கையும் தனது கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தத் தொடங்கியிருந்தன.

இந்தியாவின் பண்டித் ரவிந்திரநாத் தாகூர் அவர்கள் , இக் காலத்தில் சாந்தி நிகேதனை (Santiniketan) உருவாக்கி இந்திய கலை மற்றும் பண்பாடுகளை மீட்சியுடன் செயல்படுத்த ஆரம்பித்திருந்தார்.

விசேடமாக மஞ்சுஶ்ரீ , சுனில் சாந்த , எதிரிவீர சரச்சந்திர , உடனங்கல சரணங்க பௌத்த பிக்கு ஆகியோரை போல அநேக இலங்கையர்கள் , இலங்கையிலிருந்து சாந்தி நிகேதனுக்குச் சென்று கலைகளை கற்றுத் தேர்ந்ததோடு , பலவித ஆராச்சி முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த இலங்கையர்களில் ஒருவராக பத்தேகம பகுதியிலிருந்து லயனல் எதிரிசிங்க எனும் அழகான இளைஞரும் இணைந்திருந்தார். இவர் இசை பயிற்சிக்காகவே மேற்கு வங்க சாந்தி நிகேதனுக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற இந்த இளைஞன் ஹிந்தி மொழியை விரைவாகக் கற்றதோடு , தனது உடையலங்காரங்களையும் இந்திய கலாச்சாரத்தோடு பின்னி பிணையக் கூடிய விதத்தில் அணியத் தொடங்கியிருந்தார்.

இதனால் லயனல் , சாந்தி நிகேதனுக்குள் அதிக ஈர்ப்பு உள்ளவராக பிரபல்யம் பெற்றார். அநேக பெணக்களின் கடைக் கண் பார்வை கூட அவர் மேல் விழத் தொடங்கியது.

ஆனால் லயனலின் கடைக் கண் பார்வையோ வேறோர் பெண் மேல் விழுந்திருந்தது.

காமதேவனுக்குத்தான்  இனம் , மதம் , சாதி , தேசம் போன்ற வித்தியாசம் இல்லையே…. இவனது மனம் , தன்னுடன் ஒன்றாக பயின்று வந்த இந்திரா பிரியதர்சனி எனும் யுவதி மீதே பதிந்தது.

வயதில் அவனை விட 4 வயது குறைந்தவளாக பிரியதர்சனி இருந்தாள். அவர்கள் இருவரும் மிக வேகமாக ஒருவரை ஒருவர் நெருங்குவதை அனைவரும் அவதானித்தனர்.

சாந்தி நிகேதனில் நடைபெறும் இசை நிகழ்வுகளிலும்  , உல்லாச பயணங்களிலும் இருவரும் ஒன்றாக இணைந்து பயணிப்பது காலப் போக்கில் பொதுவான ஒன்றாக மாறியது.

இராவணனின் நாட்டிலிருந்து வந்த ஒரு இளைஞன் , இராம பூமியின் பெண்ணுடன் நெருக்கமாகி விட்டான் என கதைகள் பரவத் தொடங்கின.

இந்திரா , சாதாரண குடும்ப பெண் இல்லாததால் , அக்கதை எங்கும் கட்டுக் கதை போல வேகமாக பரவியது.


இந்திய தேசத்தை , ஆங்கில பேரரசிடமிருந்து விடுவிக்க போராடும் மகாத்தமா காந்தியின் வலது கரமாக இருந்த பண்டித் ஜவகர்லால் நேருவின் ஒரே புதல்விதான் இந்திரா பிரியதர்சனி.

எனவே அவர்களது காதல் பலர் கண்களை உறுத்தியதில் வியப்பேதும் இல்லை. இந்த உறவு குறித்து விரைவிலேயே பண்டித் ஜவகர்லால் நேருவுக்கு தெரிய வருகிறது.

பண்டித் ஜவகர்லால் நேரு , லயனல் மற்றும் இந்திரா இடையேயான உறவை தான் விரும்பவில்லை எனவும் , அவர்கள் ஒன்றாக செயல்படுவதை தடுக்கும் படியும் தன் கைப்படவே பண்டித் ரவிந்திரநாத் தாகூர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை வரைகிறார்.

இப்படியான ஒரு உறவுகளை பொதுவான ஒன்றாக கருதும் ரவிந்திரநாத் தாகூர் அவர்கள் , அதை பெரிதுபடுத்தாமல் , நேருவின் கடிதத்துக்கு பதில் அனுப்பாமலே தவிர்த்துவிடுகிறார்.

இது குறித்து  மகாத்மா காந்தி மற்றும் சரோஜினி நாயுடு போன்ற மிக நெருக்கமானவர்களோடு நேரு  பேசிய போதும் , அவர்கள் கூட நேருவின் எண்ணத்துக்கு எதிராகிறார்கள்.

இதனால் சலித்து போன நேரு , நேருவின் மனைவியும் , இந்திராவின் தாயுமான கமலா நேருவிடம் இது குறித்து மகளை கண்டிக்குமாறு சொன்ன போது கூட , அவரும் நேருவுக்கு எதிராகவும் , இந்திராவுக்கு ஆதரவாகவும் பேசுகிறார். இறுதியில் நேருவுக்கு மௌனமாக இருக்க வேண்டி வருகிறது.

தனது குடும்பம் மீது அதீத பாசம் கொண்ட லயனல் , இலங்கையிலுள்ள தனது பெற்றோருக்கு தனது காதல் விடயத்தை  கடித மூலம் தெரிவிக்கிறார். ஆனால் லயனலின் தந்தையான ஹில்பட் ராலகாமி , தனது எதிர்ப்பை தெரிவித்து தனது மகனுக்கு கடுமையாக மடல் ஒன்றை வரைகிறார். அதில் வேற்று நாட்டு பெண் ஒருவரை, தன் மகன் திருமணம் செய்வதை தான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என அதில் குறிப்பிடுகிறார்.

தனது தந்தையின் மடலால் அதிர்ந்து போகும் லயனல் , தனது காதலை துறப்பதில்லை எனும் முடிவுக்கு வருகிறார் .

ஆனால் இக் காலம் இந்திராவின் குடும்பத்தினருக்கு நல்ல காலமாக அமையவில்லை.

ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்ட குடும்பத்தினர் அடிக்கடி சிறை செல்ல வேண்டியதாகிறது. பல வேளைகளில் கமலா நேருவும்,  சிறைகளில் அடைக்கப்பட்டார். இப்படியான தருணத்தில்தான்   கமலா நேரு , காச நோயின் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

TB எனப்படும் காச நோய் மருத்துவத்துக்காக தென் ஜேர்மனியில் முறையான மருத்துவம் இருப்பதாக அறிந்து , கமலா நேரு , ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக புறப்படுகிறார். இதை அறியும் இந்திரா காந்தி , சாந்தி நிகேதனில் அவரது கல்வியை விட்டு , தாயின் உதவிக்காக ஜேர்மனிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். ஆனாலும் சாந்தி நிகேதனை விட்டுச் செல்வது , அவருக்கு மிக இலகுவாக முடியாத காரியமாகிறது. அதற்கு காரணம் லயனல்தான்.

தனது தாயார் சுகமானதும் , திரும்பவும் லயனலை தேடி சாந்தி நிகேதனுக்கு திரும்பி வரும் உறுதி மொழியோடு கண்ணில் நீர் மல்க இந்திரா , லயனலிடமிருந்து விடைபெறுகிறார். இந்திராவின் நிலையை உணரும் லயனல் , அவருக்கு நம்பிக்கையோடு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறார்.

கமலா
கமலா

இந்திரா , ஜேர்மனிக்கு வந்த பின் தொடர்ந்து மடல் மூலம் லயனலோடு தொடர்புகளை பேணிய போதிலும் , காலப் போக்கில் நோய்வாய்ப்பட்ட தாய்க்கு செய்ய வேண்டிய அதிக பணிவிடைகளால் இருவரது தொடர்புகளும்  தொய்வடைகின்றன.

சிறு காலத்துக்கு பின்னர் தாயார் கமலாவோடு , இந்திரா ஜேர்மனியை விட்டு இந்தியா திரும்பிய போதிலும் , கமலாவின் நோய் மீண்டும் கடுமையாகிறது.

எனவே மீண்டும் மேலதிக சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிற்சர்லாந்துக்கு போக வேண்டியதாகிறது. அப்போதும் நேரு சிறையில் இருந்தார்.

நேருவின் மனைவி கமலா  இறுதி தறுவாயில் இருப்பதால் , ஆங்கிலேயரிடம் விசேட அனுமதி பெற்று நேரு சுவிசுக்கு வருகிறார். அவரை கண்ட பின் கமலா , அவரது இறுதி மூச்சை விடுகிறார்.

அதன்பின் பண்டித் ஜவகர்லால் நேருவின் அனைத்து முக்கிய பொறுப்புகளும் இந்திராவின் தலைமேல் விழுகிறது. அந்த பொறுப்புகளால் , இந்திரா விருப்பமின்றி தனது முதல் காதலை மறக்க வேண்டியவராகிறார்.

இந்திரா மீண்டும் இந்தியா திரும்பாமல் , லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இணைந்து தனது கல்வியை தொடருகிறார்.

இக்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகியிருந்த பேரூஸ் காந்தி என்பவரை இந்திரா சந்திக்கிறார். தாயினது மறைவின் சோகத்தில் துவண்ட இந்திராவுக்கு , பேரூஸினது நட்பு ஆறுதலாகிறது.

அத்தோடு இந்திராவுக்கு தேவையான கல்வி தொடர்பான உதவிகளையும் பேரூஸ் காந்தி செய்கிறார்.

இதனால் அவர்களிடையே காதல் அரும்புகிறது. ஆனாலும் அவர்களிடையே ஒத்துப்போகாத புரிந்துணர்வற்ற தன்மையும் இடையிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறது.

அதில் முக்கியமான விடயமாக பெரோஸ் தனது இனத்தவராகவோ அல்லது ஹிந்து மதத்தவராக இல்லாமை பெரும் கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறது. பெரோஸ் காந்தி , பரூச்சில் இருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்த குஜராத் பார்சி இனத்தவராவார்.

தனது முதல் காதலுக்கு தடையான தனது தந்தையின் குணமறிந்த இந்திரா , பெரூஸ் உடனான காதலை முறித்துக் கொள்வதில்லை என திடசங்கற்பம் பூணுகிறாள்.

இக்காலத்தில் லயனல் எதிரிசிங்க , சாந்தி நிகேதனை விட்டு வெளியேறுகிறார்.

அங்கிருந்து வெளியேறும் லயனல் , உஸ்தான் அலாவுதீன் கானிடம் சென்று சித்தார் வாத்தியத்தை கற்க இணைந்து கொள்கிறார். அக்காலத்தில் உலக பிரசித்தி பெற்ற சித்தார் மேதையான ரவிசங்கரும் , சித்தார் வாத்திய பயிற்சிக்கு அங்கு இணைகிறார்.

லக்னோ விஸ்வ – பாரதி பாத்கண்டே சங்கீத நிகேதனில் பயிற்சியை முடித்துக் கொள்ளும் லயனல் , இலங்கை திரும்புகிறார். உஸ்தான் அலாவுதீன் கானிடம் பயிற்சி பெற்று பண்டித் பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞன் லயனல் எதிரிசிங்க ஆவார்.

லயனலுக்கு இந்தியாவில் அநேக வாய்ப்புகள் வந்த போதும் , அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு , தனது முதல் காதல் தோற்றுப் போன வேதனையோடு தாய் நாடான இலங்கைக்கு திரும்புகிறார். தனது முதல் காதல் தோற்றுப் போனது,  லயனலின் மனதை துன்பப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இலங்கை திரும்பிய லயனல் ஹேவுட் கலை பீடத்தின் அதிபராக கடமையாற்றுகிறார். பின்னர் Government College of Fine Arts எனும் கலை பீடத்தை உருவாக்கி தலைமை ஏற்கிறார். அதுவே University of the Visual & Performing Arts என அழைக்கப்படுகிறது.

அதேபோல இலங்கையின் முதல் தேசிய கீதமான ஶ்ரீலங்கா பாலா யசமகிமா எனும் பாடலை உருவாக்கினார்.

இந்திரா ,  பெரோஸ் காந்தியை மணமுடித்த பின்னரே , லயனல் திருமணம் செய்தார்.

இந்திரா  மேல் இருந்த காதலால் லயனல்,  தனது மகளுக்கு இந்திரா என பெயரிட்டார்.

இந்திரா காந்தி , இலங்கை வந்த அத்தனை முறைகளும் அவர் ,  லயனலை சந்திக்க தவறியதே இல்லை.

அதேபோல லயனல் இந்தியா செல்லும் அனைத்து நிகழ்வுகளுக்கும் , உதவும்படி இலங்கையின் இந்திய தூதரகத்துக்கு தனிப்பட்ட ரீதியில் இந்திரா காந்தி  அறிவுறுத்தியிருந்தார்.

இடையிடையே லயனலோடு அடிக்கடி தொலைபேசி வழி தொடர்புகளையும்  பேணி வந்தார். அப்படி இருவரும் பேசும் அனைத்து நேரங்களிலும் லயனலை குடும்பத்தோடு இந்தியா வந்து தங்கும்படியும் , அங்கு வந்தால் இசை தொடர்பான ஓர் உயர் பதவியொன்றை தருவதாகவும் வற்புறுத்திவந்தார்.

ஆனால் அவற்றை லயனல் மௌனமாக நிராகரித்தே வந்தார்.

லயனலின் இறுதி காலத்தில் அவர் இதய நோய்க்கு ஆளானார். அதை கேள்வியுற்ற இந்திரா , இலங்கை தூதரகத்துக்கு அறிவித்து , அவருக்கு தேவையான அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி , மேலதிக சிகிச்சைக்காக அவரை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவருமாறு பணித்தார்.

லயனலை கவனித்து வந்த வைத்தியர்களோ , அவர் உள்ள நிலையில் விமான பயணம் உயிருக்கு ஆபத்தானது என அவரை அனுப்ப தடையானார்கள்.

அதை கேள்வியுற்ற இந்திரா , கடும் வேதனைக்கு உள்ளானதோடு , தனது கைப்பட ஒரு மடலுடன் , ஒரு பூங்கொத்தையும் தனது அதிகாரிகள் மூலம் அனுப்பி வைத்ததோடு , அவரது உடல் நிலை குறித்து அவதானித்து தினமும் அறிக்கையிடுமாறு வற்புறுத்தியிருந்தார்.

லயனல் கடும் நோயுடன் வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருந்த போதுதான் , இந்திராவின் பாதுகாவலரது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 1984 அக்டோபர் 31ம் திகதி இந்திரா காந்தி உயிரிழந்தார்.

லயனல் கடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால் , இந்திராவின் மரணம் குறித்த செய்தியை லயனலின் குழந்தைகள் கடும் பிரயத்தனம் செய்து அவருக்கு அறிவிக்காது மறைத்தனர்.

ஆனால் படுத்த படுக்கையாக இருந்த லயனலும் 1988 மே 22ம் திகதி மரணித்து போகிறார்.

சாகும் வரை இந்திரா இறந்தது தெரியாமலே லயனலும் மரணித்து போனார்.

ஒருவேளை இவர்களது காதல் கைகூடி இருந்தால் இலங்கையின் தலைவிதி வேறாக மாறியிருந்திருக்கலாம்?

மூலப்பதிவு : விஸ்வகர்ம
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.