லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பலத்த பாதுகாப்பு

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கத் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு நான்கு மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கண்போன போக்கில் சுற்றுலாப்பயணிகளை நோக்கி சுட்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இது, இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதற்காக இந்தியா திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நான்கு மடங்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

“பாகிஸ்தானின் லாகூரில் மக்கள் தொகை அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியான மொஹல்லா ஜோஹர் டவுனில் அமைந்துள்ள ஹபீஸ் சயீத்தின் வீடு ஏப்ரல் 22 தாக்குதலுக்குப் பிறகு தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையத்தின்கீழ் வந்துள்ளது.

“பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் இயக்கத்தினர் இணைந்து ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிடுகின்றன. அவன், தங்கியிருக்கும் வளாகத்தை கண்காணிக்க ட்ரோன் வசதி செய்யப்பட்டுள்ளது. நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சாலைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,” என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக இருந்தாலும் சயீத் தொடர்ந்து பாகிஸ்தானில் வெளிப்படையாக வசித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.