மம்தா பானர்ஜி ஆட்சி…மொட்டை அடித்த காங்கிரஸ் தலைவர்..!

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமீபத்தில் சாகர்திகி என்ற பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மறைமுக கூட்டணி வைத்து திரிணாமுல் கட்சியை வீழ்த்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மீது தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுஸ்தவ் பகிச்சி கடும் கண்டனம் தெரிவித்தார்.

முதலமைச்சர் இவ்வாறு தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டால் பதில் தாக்குதல் நடத்துவதற்கு நாங்களும் தயங்க மாட்டோம் என கவுஸ்தவ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவமதிப்பு, கலவரத்தை தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுஸ்தவ் மீது வழக்கு பதிவு செய்து மேற்கு வங்க காவல்துறை அவரை கைது செய்தது.

இந்த திடீர் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட கவுஸ்தவ் பகிச்சிக்கு நகர செசன்ஸ் நீதிமன்றம் பிணை வழங்கியது. அதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த கவுஸ்தவ் தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிகாலை 3 மணிக்கு காவலர்கள் என் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்களிடம் அப்போது எந்த ஆவணங்களும் இல்லை. மம்தா பானர்ஜிக்கு எதிரான எனது போராட்டம் தொடரும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளேன். மம்தா பானர்ஜியை ஆட்சியை விட்டு அகற்றாமல் நான் தலையில் முடி வளர்க்க மாட்டேன்” என சபதம் எடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.