போதைப் பொருள் – பாதாள உலக தாதாக்கள் மடகாஸ்காரில் சிக்கியது எப்படி?

போதைப் பொருள் போட்டியில் ஈடுபட்டுள்ள இந்நாட்டின் சக்திவாய்ந்த பாதாள உலக தாதாக்கள் மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியுள்ளமை இன்றைய பேசு பொருளாக உள்ளது.

கிருலப்பனை போதைப் பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் டுபாய் பொலிஸாரிடம் சிக்கியது போன்று ஹரக்கட்டா, குடு சலிந்து உள்ளிட்ட குழுவினர் மடகாஸ்கரில் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியது தற்செயலாக அல்ல என்றும், இலங்கையை தளமாகக் கொண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் சக்தி வாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கை போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பாதாள உலகில் நிலவும் கொடிய போட்டியின் விளைவாக, இந்த நாட்டில் போதைப் பொருள் கடத்தலின் முக்கிய இணைப்பாகக் கருதப்பட்டு தற்போது நாட்டை விட்டு வெளியேறிய பிரபலகடத்தல்காரன் ஒருவனால் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்த பாதாள உலக குற்றவாளி பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல்காரரின் மகளை திருமணம் செய்துள்ளார். சிலகாலம் அவர் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார்

பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் 2014ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு இவரைப் பிடித்து இந்த நாட்டுக்குக் கொண்டு வந்தது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் , கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்

உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தபோதும் இறுதியாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான உடனே துபாய் சென்றுவிட்டார்.

தற்போது ஹரக்கட்டா தனது போதைப் பொருள் கடத்தலுக்கு மிகத்தீவிரமான போட்டியாளராக இருப்பதால், அவரை இந்தப் போட்டியில் இருந்து நீக்குவதற்கான அனைத்துத் திட்டங்களையும் தயார் செய்து மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்திருப்பவர் இவர்தான்.

ஹரக்கட்டா மற்றும் குடுசலிந்து ஆகியோருக்கு இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரால் மடகாஸ்கருக்கு செல்ல தனி ஜெட் விமானம் வழங்கப்பட்டது.

ஹரக்கட்டா என்ற நடுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன என்ற குடுசலிந்து ஆகியோர் தம்மை கோடீஸ்வர வர்த்தகர்களாக காட்டிக் கொண்டு மடகஸ்கருக்கு செல்வதற்காக தனியார் ஜெட்விமானம் வழங்கப்பட்டிருப்பது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது துபாயில் தங்கியுள்ள அவர், பெரிய அளவில் உண்டியல் எனப்படும் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி, குண்டசாலையில் சில காலம் தங்கியிருந்த அவர், பின்னர் தனது இரண்டாவது மனைவியுடன் கடுவெல வெலிவிட்ட பக்கத்தில் குடியேறியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, இவர் சிங்கப்பூர் தொடர்பான பல பரிவர்த்தனைகளை செய்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் நடந்த கலை நிகழ்ச்சிகள் அவர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளுக்கு இலங்கையிலிருந்து கலைஞர்களையும், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து வந்துள்ளார்.

சிங்கப்பூர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த செட்டித் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று பெரும் கப்பம் வாங்கியதாகப் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹரக் கட்டா உண்டியல் தொழிலை தொடங்கியுள்ளார். ஹரக் கட்டாவால் கடத்தப்பட்ட நபர்தான், ஹரக் கட்டா மற்றும் குழுவினருக்கு துபாயில் இருந்து மடகாஸ்கருக்கு செல்ல தனி ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

துபாயில் சிக்கி தப்பிய பின் , ஹரக் கட்டா நாட்டை விட்டு வெளியேறியது இதுவே முதல் முறை. துபாயில் இருந்து மடகாஸ்கருக்கு சென்ற ஹரக் கட்டா மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் , தங்களது போதைப் பொருள் பணத்தை ரத்தின வியாபாரத்தில் முதலீடு செய்ய முடியுமா என அறியவே சென்றதாக குற்றவியல் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மடகாஸ்கரில் இந்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களால் இலங்கைக்கு ஹரக் கட்டா மற்றும் போதைப்பொருள் சலிந்துவை மட்டுமே கொண்டு வருவதற்கு அந்நாட்டு போலீசாரது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.