இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் திரண்ட வரலாறு காணாத போராட்டம்.

இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு நியமிக்கும் 9 பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும்.

முன்னதாக நீதிதுறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் டெல் அவிவ்வில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

ஏராளமான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் நீதித்துறை அதிகாரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை இந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரதமர் நேதன்யாகு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியானது.

Leave A Reply

Your email address will not be published.