உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இலங்கை வங்கியின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் செனாரோ மோட்டார் தனியார் நிறுவனம்,1.5 பில்லியன் ரூபா முதலீட்டில் யக்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய உதிரிப்பாக ஒன்றிணைத்தல் தொழிற்சாலையின் ஊடாக ஆரம்ப கட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மூலம் 35% பெறுமதி கூட்டப்பட்டு இந்த SENARO GN 125 மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்கின்றது. இந்த பெறுமதி சேர்த்தலை விரைவில் 50% ஆக உயர்த்துவது அவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதோடு, இந்த திட்டத்தின் மூலம்160 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டுப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சக்தியாக மாறுவதுடன், உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய ஆற்றலை வழங்கி SENARO GN 125 மோட்டார் சைக்கிள், இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,

இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, பொது முகாமையாளர் ரசல் பொன்சேக்கா, பிரதிப் பொது முகாமையாளர் ரோஹன குமார, செனாரோ மோட்டார் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹான் சோமச்சந்திர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.