சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகும் தமிழ்நாடு பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும், இடைத்தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பின்னர், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். அதில், ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் இடம் பெற்றிருக்கும்.

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை அறிவிப்பு முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் ஆக உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையை ஆற்றி முடித்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.

அந்தக் கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படும். பின்னர், வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார். மேலும், அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான அலுவல்கள் நடக்கும் தேதி பற்றி சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.

Leave A Reply

Your email address will not be published.