ஆஸ்கர் விருது வென்ற ஆவணக் குறும்படத்தின் இயக்குநருக்கு ரூ.1 கோடி வழங்கிய முதலமைச்சர்!

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானைகளைப் பராமரித்த பொம்மன் – பெள்ளி தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட The Elephant Whisperers ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது.

தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த இந்த ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் – பெள்ளி தம்பதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஆவணப்படத்தின் இயக்குநரான கார்த்திகி கொன்சால்வஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது, கார்த்திகி கொன்சால்வஸ் தாம் வென்ற ஆஸ்கர் விருதை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர், ”ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை ஆஸ்கர் விருது வரை கொண்டுசென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் பாராட்டி ஊக்கத்தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம் தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திகி கொன்சால்வஸ், தமிழ்நாட்டிற்கு ஆஸ்கர் விருதைக் கொண்டு வந்தது பெருமையளிப்பதாக தெரிவித்தார். மேலும் தான் நீலகிரியைச் சேர்ந்தவர் என்பதிலும் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.