உயர் கல்வித் துறையை மேம்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடல்.

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்க்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.

உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு, அவற்றை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் உள்ள அரசு அல்லாத உயர்கல்வி நிறுவனங்களான நாகனந்தா நிறுவனம், SLINTE உயர்கல்வி நிறுவனம், ஈசொப்ட் மெட்ரோ கெம்பஸ், செய்ஜீஸ் கெம்பஸ், ICBT, Royal Institute, IChem போன்ற உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டதுடன், அந்தத் துறைகளை விரிவாக்குவதற்கு காணப்படும் சந்தர்ப்பங்கள், தடைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகள் என்பன தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

உயர் கல்வித்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ இப்பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

உயர்கல்வித் துறையில் புத்தாக்கங்களையும், புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றபோதும், அவற்றை முன்னெடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென இங்கு வருகை தந்திருந்த உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இந்த நிலைமையை இலகுபடுத்தும் நோக்கில் அரசாங்க தலையீட்டுடன் கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட முறைமையின் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.