புதிய அரசமைப்பு எவ்வாறு அமையும்? 12 சரத்துகள் தவிர ஏனையவை ‘அவுட்’ – வெளியானது தகவல்

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பில் 12 சரத்துகளைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களும் புதிய அரசமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

புதிய அரசமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழான ‘மௌபிம’ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி பௌத்த மதம், தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றில் தாக்கம் செலுத்தக்கூடிய 12 சரத்துகளில் எவ்வித மாற்றமும் வராது எனவும், ஏனைய சரத்துகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது நீக்குவதற்கோ நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் போதும் என்பதால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அந்த நிபுணர் குறிப்பிட்டார் என குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை 21ஆவது திருத்தச் சட்டமாகக் கருதாமல் புதிய அரசமைப்பாகவே அடையாளப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நிபுணர் குழு கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளது.

புதிய அரசமைப்பை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் இயற்ற முடியும் எனவும், அதனை 2021 ஜனவரியில் அரசிடம் கையளிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறித்த நிபுணர் கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், பல்துறையினரிடமும் புதிய அரசமைப்பு குறித்து கருத்துக்கள், ஆலோசனைகள் உள்வாங்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.