இனி அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 2 மணி வரை இயங்க வேண்டும்

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது நாட்டில் வெயில் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், மின்தேவை உச்சமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நண்பகல் வேளையில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருப்பதால் அப்போது தான் மின்சாரத்தின் பீக் லோட் எனப்படும் உச்சபட்ச தேவை உருவாக்கிறது.

இதை கருத்தில் கொண்டு மின்சார தேவையை சீராக்கும் விதமாக புதிய முன்னெடுப்பை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் மே 2-ம் தேதி தொடங்கி அம்மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 2 மணி வரை இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறையானது ஜூலை 15ஆம் தேதி வரை தொடரும் என உத்தரவில் கூறியுள்ளது. தற்போதைய நிலையில், அரசு அலுவலகங்கள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றன.

வெயில் கால மின்சார தேவையை கருத்தில் கொண்டு மாநில அரசு உயர் அலுவலர்கள், அரசு ஊழியர்கள் தரப்பு பிரதிநிதிகளிடம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் 300இல் இருந்து 350 மெகாவாட் அளவில் மின்சார தேவை குறையும் என முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். அதேபோல, தானும் காலை 7.30 மணிக்கு எல்லாம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.