அனைத்தும் சமமானவை. ஆனால், மேலானவை அல்ல – சண் தவராஜா

கடந்த வாரத்தில் உலக அரங்கில் பல பரபரப்பான செய்திகள் உலா வந்தன.

அதில் இரண்டு ஊடகர்களைப் பற்றிய செய்திகளும் அடக்கம்.

ஒருவர் ரஸ்யாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். மற்றவர், ரஸ்யாவில் உளவுத் தகவல்களைச் சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த இரண்டு விடயங்களையும் பன்னாட்டு ஊடக நிறுவனங்கள் அளிக்கை செய்த விதத்தில் ஒத்த தன்மை இருந்திருக்கவில்லை. அது எதனால் என்பதை அறிந்து கொண்டால் உலகம் எந்த அச்சில் சுழல்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

உக்ரைன் போரில் ஒரு முனையில் ரஸ்யாவும் மறு முனையில் முழு மேற்குலகும் சம்பந்தப்பட்டிருப்பது தற்போது பரகசியமாகி விட்டது. ஆயுத விநியோகம், ஆயுதப் பயிற்சி வழங்குதல், உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், இலக்குகளை குறிப்புணர்த்துதல் என்பவற்றையும் தாண்டி உக்ரைன் சார்பில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் மேற்குலகம் பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருக்கிறது.

உக்ரைன் சார்பான பரப்புரை மட்டுமன்றி ரஸ்யாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிரான பரப்புரைகளும் இதில் அடங்கும்.

போர் ஆரம்பித்த நாள் முதலாக மேற்குலகு எங்கும் ரஸ்ய ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக மூடுவிழா நடைபெற்று வருகின்றது. இணையத் தளங்களுக்குத் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சி, வானொலி என்பவற்றுக்கான அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டு வருகின்றன. ஊடகங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. ரஸ்ய ஊடகங்களில் பணியாற்றுவோர் பலர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், ரஸ்யாவும் தனது சார்புப் பரப்புரைகளை மேற்கொள்ள பல வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றது. அரசாங்க சார்பு ஊடகங்களும் ஒருசில தனியார் ஊடகங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஒருசிலரும் இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய சமூக ஊடகம் ஒன்றில் பணிபுரியும் வலைப்பதிவர் ஒருவரே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். விளாட்லன் ராற்றார்ஸ்கி என்ற இவர் ஏப்ரல் 2ஆம் திகதி ரஸ்யாவின் இரண்டாவது பெரிய நகரான சென்.பீட்டர்ஸ்பேர்க்கில் தேநீர் விடுதி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் சம்பவம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஒரு பெண்மணி பரிசாக வழங்கிய ஒரு சிறிய பொம்மை வடிவிலான உருவத்திலேயே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குறித்த பெண்மணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Russian blogger Vladlen Tatarsky speaks during a party in front of projection of an image of him, before an explosion at a cafe in St. Petersburg, Russia, Sunday, April 2, 2023. An explosion tore through a cafe in the Russian city of St. Petersburg on Sunday, and preliminary reports suggested a prominent military blogger was killed and more than a dozen people were injured. Russian news reports said blogger Vladlen Tatarsky was killed and 15 people were hurt in the explosion at the “Street Bar” cafe in Russia’s second largest city. (AP Photo)

மக்சிம் பொமின் என்ற இயற்பெயரைக் கொண்ட ராற்றார்ஸ்கி, உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர். 2014இல் உக்ரைனில் ஆரம்பமான உள்நாட்டுப் போரில் தீவிரவாதிகள் தரப்பில் இணைந்து செயற்பட்ட இவர் 2019இல் அதிலிருந்து விலகி தன்னை ஒரு வலைப் பதிவாளராக மாற்றிக் கொண்டார். போர் நடைபெறும் பிராந்தியத்தில் இருந்து களமுனைச் செய்திகளை வழங்குவதில் வல்லவரான இவர் பிரபல்யம் மிக்கவர். இவருடைய வலைப்பக்கத்தினை 560,000 பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது. ரஸ்யப் படைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் உக்ரைன் படைகளின் பின்னடைவு தொடர்பிலும் இவர் அதிகம் பேசிவரும் நிலையில் இவர் மீது இந்த வருடம் யனவரி மாத்தில் உக்ரைன் அரசாங்கம் தடைகளை அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே இவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் உக்ரைன் உளவுப் பிரிவினராலேயே கொல்லப்பட்டதாக ரஸ்யா பகிரங்க குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. எனினும் வழக்கம் போன்று உக்ரைன் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராற்றார்ஸ்கியைப் போன்றே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு ஊடகரான டாரியா டுகினா கார்க் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார். இவருடைய கொலையிலும் உக்ரைனிய புலனாய்வுப் பிரிவினரே தொடர்புபட்டு இருந்ததாக ரஸ்யா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராற்றார்ஸ்கியின் கொலை தொடர்பில் பன்னாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தாலும் அதற்கு பாரிய முக்கியத்துவம் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதேநேரம், இந்தக் கொலைக்குத் தமக்கும் தொடர்பு இல்லை என உக்ரைன் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ‘ரஸ்யப் படைகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே’ என்ற மனோநிலை மேற்குலக ஊடகங்களில் நிலவுவதை மறைப்பதற்கில்லை.

அதேவேளை, ‘வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகையின் ரஸ்ய நிருபராகச் செயற்படும் இவான் ஜெர்ஸ்கோவிச் மார்ச் 30ஆம் திகதி ரஸ்யப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். ரஸ்யாவின் ஊரல் பிராந்தியத்தில் உள்ள படைத் தளம் தொடர்பான இரகசியத் தகவல்களைப் பெற முயன்றார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் கைது தொடர்பான செய்திகள் பன்னாட்டு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வெளியாகி இருந்தன. வோல்ட் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையோ பல படி மேலே சென்று இந்தக் கைதைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள ரஸ்ய ஊடகவியலாளர்கள் மற்றும் ராஜதந்திரிகள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனக் குரல் தந்திருந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ரனி பிளிங்கன் உடனடியாகவே ரஸ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கை லவ்ரோவைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரையாடினார். இந்தச் செய்தி கூட பன்னாட்டு ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

ஒரு சம்பவத்தில் ஊடகர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். மறுபுறம், ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஒருவர் உயிரோடு இல்லை. மற்றவரோ இன்னமும் உயிரோடு இருக்கிறார். ஆனால், இருவர் தொடர்பான செய்திகளையும் ஊடகங்கள் கையாளும் விதம் பாரபட்சமானதாக இருக்கிறது. இதில் வித்தியாசம் என்னவெனில் இறந்தவர் ரஸ்யக் குடிமகன். கைதானவர் அமெரிக்கக் குடிமகன். இதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இரண்டாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் மேற்குலகில் பெரிதும் கொண்டாடப்பட்ட நூல்களில் ஒன்று ‘விலங்குப் பண்ணை’. இங்கிலாந்து நாட்டவரான ஜோர்ஜ் ஓவல் இதனை எழுதியிருந்தார். ஆயுதப்படை உறுப்பினராக இருந்து பின்னாளில் பி.பி.சி. நிறுவனத்தில் ஊடகராகப் பணியாற்றிய ஓவல், இரண்டாம் உலகப் போரின் பின்னான சோவியத் ஒன்றியத்தின் அரசியலைப் பற்றி அங்கதமாக இந்த நூலில் விவரித்திருப்பார்.

அதில் உள்ள ஒரு பிரபலமான வாக்கியம் இந்த இரு ஊடகர்கள் விடயத்தில் மிகப் பொருத்தமாக அமையலாம். “விலங்குப் பண்ணையில் உள்ள அனைத்து விலங்குகளும் சமமானவை. ஆனால், பன்றிகள் மாத்திரம் மேலானவை.”

இன்றைய தருணத்தில் இதே வாக்கியத்தை இவ்வாறு எழுதிக் கொள்ளலாம். “உலகில் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள். ஆனால், அமெரிக்கர்கள் மாத்திரம் ஏனையோரை விடவும் மேலானவர்கள்.”

இந்த விடயத்தைப் பேசும் போது ஜுலியன் அசாஞ்ஞே நினைவில் வருவதைத் தடுத்துவிட முடியவில்லை. இவான் ஜெர்ஸ்கோவிச் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மேற்குலகில் பலத்த குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் கூட இவானின் விடுதலைக்காகக் குரல் தந்திருக்கிறார்.

அப்படியானால் அசாஞ்ஞேயின் விடுதலைக்காக யாரும் குரல் எழுப்பாதது ஏன்? இத்தனைக்கும் அவர் அமெரிக்காவுக்குப் பிடித்தமில்லாத ஒரு நாட்டின் குடிமகன் கூட இல்லை. அவர் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக இருந்தும் அவர் தொடர்பில் மேற்குலக ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ பேச மறப்பதற்குக் காரணம் அவர் அமெரிக்காவினால் எதிரியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே. இன்றைய உலகம் இந்த அச்சிலேயே சுழல்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.