அரிதான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்… அரசின் உதவியை நாடும் பெற்றோர்!

வெகுஜன மக்களை பாதிக்கக் கூடிய அனேக நோய்களுக்கு இங்கு மருத்துவ சிகிச்சையும், மருந்துகளும் உண்டு. அதிலும் பெரும்பாலான நோய்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். ஆனால், ஒருசிலருக்கு ஏற்படக் கூடிய அரிய வகை நோய்களை குணப்படுத்துவதும், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதும் தான் பெரும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருக்கிறது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, அரிய வகை நோய்கள் பெரும்பாலும் பிராந்திய அளவிலான மருத்துவமனைகளில் கண்டறியப்படுகின்றன. தெலுங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனுக்கு அரிய வகை நோய் பாதித்திருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம், நிஜாமாஃபாத் மாவட்டத்தில் உள்ள அர்மூர் வட்டத்திற்கு உட்பட்ட ஷிவாயா என்ற பெயர் கொண்ட அந்த சிறுவனுக்கு Hydrocephalus என்ற அரிய வகை நரம்பியல் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக பொத்து ஸ்ரீகாந்த் – ஹரிகா தம்பதியருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 1-ல் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

அதில் ஒரு குழந்தை 41 நாட்களில் உயிரிழந்துவிட்ட நிலையில், உயிர் பிழைத்த மற்றொரு குழந்தையான ஷிவாயா மீது பெற்றோர் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்தனர். ஆனால், பிறந்த 5 மாதத்தில் ஷிவாயாவின் தலை வழக்கத்திற்கு மாறாக அபரிமிதமான வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது.

இதனால் பதறிப்போன பெற்றொர், பல மருத்துவமனையின் வாசல்படி ஏறி இறங்கினர். சில மருத்துவர்கள், அங்குள்ள நிபுணர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். சில மருத்துவர்கள் சிடி ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகளை செய்து மருந்துகளை வழங்கினர். குழந்தைக்கு மருந்து கொடுக்கும் நாட்களில் தலைப்பகுதியின் வீக்கம் குறைந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் பழைய நிலை தொடர்ந்தது. ஷிவாயாவின் தலை முன்பைவிட பெரியதாக மாறிய நிலையில், மிகுந்த அசௌகரியங்களை சிறுவன் சந்திக்க நேர்ந்தது.

இந்த நிலையில் செகந்திராஃபாதில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோர் கொண்டு சென்றனர். அங்குதான் அரியவகை நரம்பியல் பிரச்சினையால் சிறுவன் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மூளையின் இடுக்குகளில் தேவையற்ற திரவம் சேருவதன் காரணமாக இதுபோல தலைவீக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. மூளையில் சேர்ந்துள்ள திரவத்தை அகற்றாவிட்டால், அதன் மூலம் ஏற்படும் அழுத்தம் காரணமாக மூளை பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கணித்தனர். எனினும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர சிகிச்சை அளிக்க வழியில்லை என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

இதற்கிடையே சிறுவனின் தலை மென்மேலும் பெரியதாக வீக்கம் அடைந்து கண்களைக் கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கை, கால்களை இயல்பாக அசைக்க முடியாத நிலையில், சிறுவன் அசைவின்றி இருக்கிறான். திட உணவுகள் எதையும் சாப்பிட முடியாத நிலையில் திரவ உணவுகள் மட்டுமே சிறுவனுக்கு கொடுக்கப்படுகிறது.

ஷிவாயாவிற்கு அடுத்தபடியாக ஸ்ரீகாந்த், ஹரிகா தம்பதியருக்கு மற்றொரு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான அந்த இரட்டையர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். அதே சமயம், ஷிவாயாவின் மருத்துவச் செலவுகளுக்காக குடும்பத்தின் ஒட்டுமொத்த சேமிப்பு, நகை என ஏறத்தாழ ரூ.8 லட்சம் வரை செலவிட்டுள்ளனர். தற்போது மேற்கொண்டு செலவிட முடியாத நிலையில், தெலுங்கானா அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.