ட்ரோன்களின் உதவியுடன் மருந்து டெலிவரி…!

கோவிட்-19 பெருந்தொற்று துவங்கியதில் இருந்து டோர்-டு-டோர் மெடிசின் டெலிவரி சர்விஸ்கள் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக இந்த சேவைகளின் மூலம் சீனியர் சிட்டிசன்கள் வெகுவாக பயனடைகிறார்கள்.

இருப்பினும் மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரங்களில், இந்த டோர்-டு-டோர் மெடிசின் டெலிவரி சர்விஸ்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கிறது. அதிகரித்து காணப்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மருந்து விநியோகத்தில் பெரும்பாலும் தாமதம் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், உரிய நேரத்தில் மருந்துகளை வழங்கவும் தற்போது இந்த ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆம், மெடிசின் டெலிவரியில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க ஹூக்ளியின் ஹிண்ட்மோட்டர் (Hindmotor) பகுதியில் அதிநவீன ட்ரோன் மெடிசின் டெலிவரி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மெடிசின் டெலிவரி சர்விஸ்க்கான ட்ரோன் சோதனை ஓட்டத்தின் போது தாழ்வாக பறந்த ட்ரோனை பார்த்து, ஹிண்ட்மோட்டர் பகுதியில் விமானம் கீழே விழுந்து விட்டதாக வதந்திகள் பரவியதும் குறிப்பிடத்தக்கது.

சட்ட சிக்கல்களைக் கடந்து, உயிர்காக்கும் மருந்துகளை சரியான நேரத்தில் டெலிவரி செய்வதற்கு ஆளில்லா விமானமான ட்ரோன்கள் பறக்க இப்போது அம்மாநிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஒரு தனியார் மருந்து நிறுவனமும் இணைந்து மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ள அற்புதமான இந்த முயற்சி, வரும் ஜூன் முதல் அதிகாரபூர்வமாக துவங்க உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே குறிப்பிட்ட தனியார் மருந்து நிறுவனத்தின் தலைவரான வினீத் தந்தீர் பேசுகையில், “எங்களின் 32 கிலோ எடையுள்ள மருந்துகளை சுமந்து செல்லும் ட்ரோன், முதலில் ஹவுரா மாவட்டம் மற்றும் அதை ஒட்டிய ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை வழங்கும். பின்னர் படிப்படியாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். மருந்துகளை சுமந்து செல்லும் ட்ரோன் 132 மீட்டர் உயரத்தில் பயணித்து, ஹூக்ளியில் இருந்து ஹவுராவுக்கு வெறும் 8 நிமிடம் 20 வினாடிகளில் சென்று குறுகிய நேரத்தில் மருந்துகளை டெலிவரி செய்யும்.

இதன் மூலம் நேரம் மிச்சமாவதோடு உடனடி விநியோகமும் உறுதியாகும்” என்றார். டெல்லியை தளமாக கொண்ட ஆளில்லா விமானம் தயாரிக்கும் TSAW Drones நிறுவனத்தின் அதிகாரியான அர்பித் ஷர்மா பேசுகையில், ஏற்கனவே பல நோக்கங்களுக்காக நிறைய ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளளோம். ஆனால் மருந்துகளை விநியோகிக்கும் வகையில் ட்ரோன்களை வடிவமைத்துள்ளது இதுவே முதல்முறை. சரியான நேரத்தில் மருந்து வழங்கும் இந்த திட்டத்தால் பலர் பயனடைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

ட்ரோன் மெடிசின் டெலிவரி சேவையை அணுக, வாடிக்கையாளர்கள் தனியார் மருந்து நிறுவனத்தை நேரடியாக அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. DGCA அனுமதியின்படி, ஹூக்ளியில் இருந்து ஹவுரா வரை மட்டுமே ட்ரோன் ரூட் தொடங்கப்பட்டுள்ளது.

ஹவுராவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ட்ரோன் தரையிறங்குகிறது. அங்கிருந்து மருந்து நிறுவன ஊழியர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் மருந்துகளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்குவார்கள். கூடுதல் அனுமதிகள் வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் கூடுதல் வழிகள் மற்றும் ட்ரோன் மூலம் நேரடியாக ஹோம் டெலிவரிகள் நடைமுறைக்கு வரலாம்.

Leave A Reply

Your email address will not be published.