எங்கள் மீது பொய்ப் பழியை ஜனாதிபதி சுமத்த முடியாது! – ரணிலின் மே தின உரை குறித்து சுமந்திரன் காட்டம்.

தமிழ்க் கட்சிகள் பின்னடிப்பதால்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது நியாயமற்ற கூற்று என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறான பழிக் குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது என்பதற்காகவே செயற்பட்ட எங்கள் மீது இப்போது பொய்யான ஒரு பழியை ஜனாதிபதி சுமத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் மேதின உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணப் போகின்றார் என்று அவர் ஜனாதிபதியான காலத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்க சொல்லி வருகின்ற நிலையில் சொல்வது மட்டும் போதாது, அதனைச் செயலில் காட்ட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்தும் வருகின்றோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தங்களது கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பேசியிருக்கின்றார். தான் ஜனாதிபதியான காலத்தில் இருந்து அவர் இதனைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்.

கடந்த வருடம் நாடாளுமன்றில் நான் பேசுகின்ற போது குறுக்கிட்டுப் பேசிய ஜனாதிபதி, இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என்றும், அதுவும் இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னதாகத் தீர்த்து வைக்க நீங்கள் உடன்படுகின்றீர்களா எனவும் கேட்டிருந்தார். அதற்கு உடனேயே நானும் “ஆம்” என்று பதில் சொல்லியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து மற்றைய கட்சித் தலைவர்களிடத்திலும் இதனை அவர் கேட்டபோது அவர்களும் “ஆம்” என்று சொல்லி இருந்தனர். குறிப்பாக மஹிந்த ராஜபக்ச கூட 13 இற்கு அப்பாலே செல்வதாகக் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி அனைதத்துக் கட்சிகளின் கூட்டம் ஒன்றை மீண்டும் கூட்டி இருந்தபோது அதில் நாங்களும் பங்கேற்றிருந்தோம். அவ்வாறு பங்கேற்கும்போதுகூட இந்தப் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாவிடிலும் எங்களிலே பழி போடாமல் இருப்பதற்காக நாங்கள் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்கின்றோம் என்று சொல்லி அதிலே நாங்களும் பங்கெடுத்திருந்தோம்.

அதிலே மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து தமிழர் தரப்பு கட்சிகளுடன் நேரடியாகப் பேசுவதற்காக ஜனாதிபதி அழைத்தபோது நான்கு கூட்டங்களுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அதைத் தொடர்ந்து திரும்பவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக இதனைத் தீர்ப்பதற்கான வழி வகைகளையும் அவர் சொல்லியிருந்தார். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

அன்று அவர் கூறிய பெப்ரவரி நான்காம் திகதி வந்து போய்விட்டது. அதற்குப் பிறகு பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அமர்வு தொடங்கிய போது தன்னுடைய கொள்கை விளக்க உரையிலே அவர் திரும்பவும் அதே விடயங்களைச் சொல்லியிருந்தார்.

அதாவது நாங்கள் பேச்சின்போது கொடுத்த பல முன்மொழிவுகளைத் தான் அடையாளப்படுத்துவதாக அந்த உரையிலே அவர் சொல்லி இருக்கின்றார். அதன் பிறகு அவரைச் சந்தித்த பல தடவைகளில் நான் அதனை ஞாபகப்படுத்தி இருக்கின்றேன்.

நாங்கள் ஒத்துழைப்போம் என்று சொல்வது மட்டும் போதாது என்று தீர்வைக் காண்பதற்கான எமது முழுமையான பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டே இருப்போம். ஆகையினால் எங்களுடைய பங்களிப்பிலே எந்தக் குறைவும் இருக்காது என்பதைத் திட்டவட்டமாக அவருக்கும் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நாங்கள் காண்பித்திருக்கின்றோம்.

இந்நிலையில், மே தினத்தில் அவர் உரையாற்றுகின்ற போது தமிழ்க் கட்சிகளும் இதிலே பின்னடித்திருப்பதாக அவர் சொல்லுவது நியாயமற்ற ஒரு கூற்று ஆகும்.

ஜனாதிபதி அழைத்திருந்த முதலாவது அனைத்துக் கட்சி மாநாட்டிலே தீர்வுக்கான அவரது முயற்சிக்குத் தாமாகவே ஆதரவளிப்பதாகவும், அதனை முழுமை பெறச் செய்வதற்கு தமது பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவரே உறுதி அளித்திருந்தார்.

எந்தக் கட்சியும் இந்த விடயத்தில் பின்னடிப்பதாகச் சொல்லவில்லை. தமிழ்க் கட்சிகள் தன்னோடு சேர்ந்து நிற்க வேண்டுமென அவர் விரும்புவது இனப்பிரச்சினைக்கான தீர்வோடு சம்பந்தம் இல்லாத விடயம். ஆனாலும், இந்தத் தீர்வு விடத்திலேயே நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுவோம்; அவ்வாறு நெருக்கமாகப் பணியாற்றியும் இருக்கின்றோம். தொடர்ந்தும நாங்கள் அதைச் செய்வோம்.

ஆனால், தன்னுடைய ஆட்சியிலே நாங்கள் சேராததுதான் தீர்வைக் காண முடியாமைக்கான காரணம் என்று அவர் சொல்வாராக இருந்தால் அது நகைப்புக்குரிய ஒரு விடயம்.

அவர் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் அதற்குப் பிறகு மத்திய ஆட்சியிலே நாங்கள் என்னவிதமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.

அதற்கு முதலில் இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படவேண்டும். தீர்வுக்கான எல்லா வழிமுறைகளும் எல்லா வரைவுகளும் ஏற்கனவே அவரிடம் இருக்கின்றன. எங்களுடைய நிலைப்பாடுகள் அவருக்கு நன்றாகவே தெரியும். அதை நடைமுறைப்படுத்துவேன் என்று பல தடவைகள் அவர் சொல்லிவிட்டார். ஆகவே அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரே ஒரு விடயம்தான் பாக்கியாக இருக்கின்றது.

ஆகையினாலே திடீரென்று தமிழ்க் கட்சிகள் பின்னடிப்பதால்தான் தன்னால் தீர்வைக் காண முடியாமல் இருக்கின்றது என்று பொய்யான ஒரு பழியை எங்கள் தலையில் அவர் சுமத்த முடியாது என்பதைத் திட்டவட்டமாக ஜனாதிபதிக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.