சந்திராஷ்டமம் என்றால் என்ன?

இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்?

பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால் கிட்டத்தட்ட 25 அல்லது 26 நாட்களுக்கு ஒருமுறை இதனை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டி வரும். சரி, இந்த சந்திராஷ்டமத்தினால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பதே உங்கள் சந்தேகம் அல்லவா… அதற்கான பதிலையும் விளக்கமாக தெரிந்துகொள்வோம். கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

நமது மன நிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால், எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரு நாட்கள் மன நிலை டென்ஷனாக இருக்கும். அவ்வளவுதான். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுக்கும் பிரச்சனை இல்லை. மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசிபலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள்.

‘பதறாத காரியம் சிதறாது’ என்று சொல்வார்கள் அல்லவா, சந்திராஷ்டம நேரத்தில் ஒருவித பதட்டத்தோடு செயல்படுவோம். அதனால், இறங்கிய காரியங்களில் எளிதான வெற்றி கிடைக்காது போகும். எடுத்த காரியத்தில் அற்ப காரணங்களினால் இழுபறி உண்டாகும். இதனால், டென்ஷன் மேலும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம்.

இது போன்றவை சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பொதுவான பலன்கள். மருத்துவ ஜோதிடத்தைப் பொறுத்த வரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற இரத்தத்தைக் குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் திருமணம், க்ருஹப்ரவேசம் போன்ற சுபகாரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள்.

வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு ஏற்கெனவே ஒருவித ஆனந்த பூரிப்புடன் கூடிய டென்ஷன் இருக்கும். இதில், சந்திராஷ்டமத்தின் காரணமாகத் தோன்றும் பதற்றமும் இணைந்தால் என்னாவது? முதல் கோணல், முற்றிலும் கோணலாகி விடாதா? மணமக்களுக்கு மாத்திரமல்ல, மணமக்களின் தாய் தந்தையர்க்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பிள்ளைகளின் திருமண நாளைக் குறிக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். அதுபோன்றே அதிமுக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள்.

மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்து விடலாம். நோயாளிக்கு இரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம். சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கு சிகிச்சை செய்ய உள்ள மருத்துவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம நாள் ஆயிற்றே என்று சிகிச்சை அளிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா?

இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா என்றால் நிச்சயமாக பரிகாரம் உண்டு. சந்திரனுக்குரிய திரவம் ஆன பால் குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதட்டத்தினைக் குறைக்கும். (முதலிரவில் மணமக்கள் பால் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருப்பதும் இதற்காகத்தான்). சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்பே குறித்துக்கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல. சந்திராஷ்டம நாட்களில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு வேலையைத் துவக்குங்கள். வெற்றி நிச்சயம்.

Leave A Reply

Your email address will not be published.