“ஹெல்த் டுவரிஸம்” மேம்படுத்துவதில் அரசு கவனம்.

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு

“ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போன்ற அழகிய சூழலைக் கொண்ட நாட்டில் “ ஹெல்த் டுவரிஸம்” வேலைத்திட்டம் சாதகமாக இருப்பதாகவும், தாதியர் சேவையின் ஊடாகவும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நாட்டுக்கு வருமானம் தரும் வர்த்தகங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சாகல ரத்நாயக்க இதனை சுட்டிக்காட்டினார்.

சிறப்பான சேவைக்காக, தாதியர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும் இதற்கு இணையாக நடைபெற்றது.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க,

சர்வதேச தாதியர் தின விழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. சர்வதேச தாதியர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் நம் நாடும் இணைந்துள்ளது. தாதியர்களின் பணி சிறப்பாக உள்ளது. குறிப்பாக நெருக்கடியான காலங்களில் அவர்களின் சேவையை நாங்கள் உணர்கிறோம்.

நீங்கள் ஆற்றும் சேவை பற்றிய மதிப்பு, கொவிட் தொற்றுநோய் ஏற்பட்டபோது, நாடு உணர்ந்தது. இது என்னுடைய வேலையல்ல, இது ஆபத்தானது என்று நீங்கள் ஒருபோதும் விலகவில்லை. நீங்கள் உங்களின் கடமைகளைப் புறக்கணிக்கவுமில்லை. ஆபத்தானதாக இருந்தாலும், நாட்டு மக்களை காப்பாற்றும் உன்னத சேவையை நீங்கள் செய்தீர்கள். உங்களது மகத்தான தியாகத்தினால் இலங்கை அந்த தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டது. இது உலகின் பல நாடுகளை விட வேகமாக தொற்றுநோயிலிருந்து விடுபட நம் நாட்டிற்கு உதவியது.

இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதார நிலைமையையும் நான் நினைவுபடுத்த வேண்டும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது, நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சி நிலையில் இருந்தது. அந்நியச் செலாவணி, எரிபொருள், எரிவாயு, மருந்து எதுவும் இல்லை. நாட்டின் அன்றாட பணிகளைச் நிறைவேற்றக் கூட போதிய பணம் இல்லை. இன்னும் சில நாட்கள் சென்றிருந்தால் எங்கு சென்று முடியும் என்று சொல்ல முடியாது. சூடான் மற்றும் லெபனானின் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். அன்றிருந்த நாட்டு நிலையை ஒப்பிடுகையில், இன்று நாடு ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளது. மக்களின் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இப்போது அதையும் தாண்டிய எதிர்கால திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். ஒரு நாடாக, ஆக்கப்பூர்வமாக நாம் செயற்படுவோம். நம்மைப் போன்ற அழகான சூழலைக் கொண்ட நாட்டில் “ ஹெல்த் டுவரிஸத்தை” உருவாக்க முடியும். இதன் மூலம் சிறப்பான வருமான மூலங்கள் கிடைக்கும்.

ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் வைத்தியர்களை சந்திப்பதற்காக இந்நாட்டுக்கு வருகின்றனர். அதை நாம் மோசமான விடயமாக பார்க்க வேண்டியதில்லை. இதை நாம் ஒரு வணிகமாக மாற்றலாம். மேம்படுத்தக் கூடிய விடயங்களை மேம்படுத்தி முன்னேற வேண்டும்.
வெளிநாடுகளில் தாதியர்களுக்கான தேவை உள்ளது. சிலருக்கு மொழிச் சிக்கலே பிரச்சினையாகவுள்ளது. ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி தேவை. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பயன்பெற வேண்டும்.

இளைஞர்களுக்கான சிறந்ததொரு நாட்டை உருவாக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
இன்று, நாட்டில் பணவீக்கம் குறைந்து, பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்றன. இது நுகர்வோருக்கு சிறந்ததாக விளங்குகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறாமல் இருந்திருந்தால் இந்நிலை வேறுவிதமாக இருந்திருக்கும். அரசாங்கங்கள் மாறும்போது கொள்கைகள் மாறக்கூடாது. உங்கள் அனைவருக்கும் வாழ்வதற்கு போதுமான வருமானம் கிடைக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. நாட்டிற்கு நீங்கள் ஆற்றும் சேவைக்காக உங்கள் அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம் என்றார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ-

உலகில் கோடிக்கணக்கான மக்களை குணப்படுத்திய சேவைதான் தாதியர் சேவை. நோயுற்றவர்களைக் கவனித்துக் கொண்டால், அது புத்தரைப் பராமரிப்பது போன்றது. அதற்கு அப்பால், தாதியர் சேவை பற்றிய கூடுதல் வரையறைகள் தேவையில்லை. நம் நாட்டில் படித்த, அறிவுள்ள மக்களிடையே போலித்தனம் உள்ளது. தாதியர் சேவை பட்டப்படிப்பு மூன்றாண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
சரியாக இருந்தால், நாட்டில் தாதியர் சேவைப் பட்டம் பெற்றவர்கள் இலட்சக்கணக்கில் இருக்க வேண்டும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் தாதியர் பல்கலைகழகம்ஆரம்பிக்கும் திட்டத்தை நிறுத்த மாட்டோம். எமது பல்கலைக்கழக கட்டமைப்பில் இணையவுள்ள இந்த தாதியர் பல்கலைக்கழகத்தின் மூலம் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பட்டதாரிச் சான்றிதழ் வழங்குவதே எமது இலக்காகும். எதிர்காலத்தில், முன்பை விட இந்தத் தொழில் குறித்து சிறப்பான நோக்குடன் செயற்படுவாம். கொவிட் தொற்று நோய் காலத்தில் உங்கள் சேவையால், இந்த நாட்டில் பல இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

ஜனாதிபதியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய,

தாதியர் சேவையில் தீர்க்கப்பட்ட மற்றும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தேசிய தாதியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு சேவையாக இது மிகவும் முக்கியமானது. வரலாற்றில், ஒரு தாதியர் பீடத்தை உருவாக்குவது அவசியமானது. முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதற்கு அரசியல் ஆதரவை வழங்கினார். இந்த நேரத்தில் நாங்கள் அதை மரியாதையுடன் நினைவுகூருகிறோம். நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்ட பட்டம் மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. நாலு வருடப் பட்டத்தை வெல்ல நாங்கள் எல்லோரும் போராடினோம். தாதியர் பீடத்திலும் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் நாட்டுக்கு தேவையான பணியாளர்களை தாதியர் பீடத்தில் இருந்து உருவாக்க முடியவில்லை.

13,000 தாதியர்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஜனாதிபதியின் தலையீட்டின் பேரில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை. அரச சேவைக்கு பணியாளர்களை இணைத்துக் கொள்ளாவிட்டாலும் தாதியர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளோம். தேவையான பணியாளர்கள் இல்லாவிட்டால், சுகாதாரத் துறை பாதிக்கப்படும். இது நாட்டை பாதிக்கிறது. இதன்படி 6500 பேரை தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி பெறப்பட்டது. பதவி உயர்வு வழங்குவதுடன் ஊழியர்களை இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சிரேஷ்ட விரிவுரையாளர் பிரமித்தா மாதவி, பொது சுகாதார அமைப்பின் செயலாளர் தாதி பெர்னி சில்வா மற்றும் தாதியர்கள், அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.