தமிழகத்திற்கு நாள்தோறும் 3,500 கனஅடி காவிரி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிரடி!
பெங்களூரு/ புதுடெல்லி: டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழக அரசின் தரப்பில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடகா காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மாதவாரியாக வழங்கவில்லை. இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. எனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
அதற்கு கர்நாடக அரசின் தரப்பில், “கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 50% அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது” என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு, “உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். மழை பற்றாக்குறை காரணமாக அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவுக்கு ஏற்றவாறு நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். இதனை ஜூலை 29-ம் தேதி காலை 8 மணி முதல் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
அவசர ஆலோசனை:
இதையடுத்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நீர்ப் பாசனத்துறை அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பின் ராமலிங்க ரெட்டி கூறுகையில், “மழை பெய்யாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட இயலாது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளோம்” என்றார்.
