கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ஏன்?

கொழும்பில் இராணுவம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான உத்தரவு யாராலும் வழங்கப்படவில்லை என்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட பொது இடையூறுகளை உருவாக்கி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த குழுவொன்று தயார் நிலையில் இருப்பதாக ஜனாதிபதிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொழும்பில் 12.05.2023 இரவு முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உடனடியாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடி அவசர கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததாகவும், அதற்கமைவாக இராணுவ தளபதி விகும் லியனகே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. .

புலனாய்வுத் தகவல்களின்படி, பாதுகாப்புப் படையினர் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று முன் தினம் (12) முதல் தற்போது வரை கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிந்திய தகவல்களின்படி 1500 உணவு பார்சல்கள் தேவை என கொழும்பு பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் ஒரு உணவகத்தில் ஓடர் செய்ததை வைத்தே புலனாய்வு துறையினர், ஏதோ நடக்கப் போகிறது எனும் தகவலை தெரிவித்து , கொழும்பில் அவசர அவசரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக வெளியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்க வாரயிறுதியில் விருந்து இருப்பதாகவும், அதற்கான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்குத் தெரியவந்துள்ளது. மறுபுறம், இன்றைய நாட்களில் பல்கலைக்கழகங்களில் பரீட்சைகள் நடைபெறுவதாகவும், பரீட்சைகள் இருக்கும் போது, மாணவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்வதே இல்லை எனவும் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.