கேரளாவில் லட்சக்கணக்கில் காலியாக கிடக்கும் வீடுகள்…!

கேரள மக்கள் இல்லாத நாடுகளே இல்லை என்பார்கள். அது ஓரளவிற்கு உண்மை தான். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் கேரளத்தை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அப்படி கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற பலரும் குடும்பத்துடன் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள். ஆனாலும் தங்கள் சொந்த ஊர் பாசம் அவர்களுக்கு விட்டுப் போவதில்லை. அதனால் ஓய்வு பெற்ற முதுமைக் காலத்தில் தங்கள் சொந்த ஊர்களில் வந்து காலத்தை கழிக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் கேரளாவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களில் வீடுகள் கட்டுகிறார்கள். இப்படி பல லட்சம், சில கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட பிரம்மாண்ட வீடுகள் கேரளாவில் ஏராளம்.

ஓய்வு பெற்ற பிறகு சில முதியவர்கள் மட்டும் தங்கள் சொந்த ஊர் திரும்பி ஆசை ஆசையாய் தாங்கள் கட்டிய வீடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுளிலேயே தங்கி விடுகிறார்கள். தனியாக தங்கியிருக்கும் முதியவர்கள் இறந்த பிறகு அந்த வீடுகள் கேட்பாரற்று போய் விடுகின்றன. இப்படி கேரளாவில் என்ஆர்ஐக்களுக்கு சொந்தமான 11 லட்சத்து 89 ஆயிரத்து 144 வீடுகள் காலியாக கிடப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பத்தினம்திட்டா மாவட்டம் கொய்புரம் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 11,156 என்ஆர் வீடுகள் இருப்பதாகவும், அவற்றில் 2,886 வீடுகள் ஆளில்லாமல் பூட்டிக் கிடப்பதாகவும் கூறியுள்ளது ஹரிதா கர்மா சேனா என்கிற தொண்டு நிறுவனம். இப்படிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அந்த வீடுகளில் இருக்கும் வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதன பொருட்கள் சிதைந்து சேதமடைந்து போகின்றன. இதனால் சொந்த பந்தங்களின் நிகழ்ச்சிகளில் தங்குவதற்காக எப்போதாவது சொந்த ஊருக்கு வரும் வீட்டு உரிமையாளர்கள் சொந்த வீடு இருந்தும் ஹோட்டல்களில் தங்கும் நிலைதான் உள்ளது.

இப்படிப்பட்ட வீடுகள் ஆயிரக் கணக்கில் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் அந்த வீடுகளின் விலை கோடிக் கணக்கில் என்பதால் வாங்கத்தான் ஆளில்லை என்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர். இரண்டு கோடி ரூபாய் செலவு செய்து ஒரு என்ஆர்ஐ வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அதன்பிறகு அவரது மனைவி உயிரிழந்திருக்கிறார். உடனே வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் தந்தையை தனியாக இருக்க வேண்டாம் எனக் கூறி தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர்.

அதனால் வேறு வழியில்லாம் கிரகப் பிரவேசம் முடிந்த சில நாட்களிலேயே இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தன் வீட்டை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றவிட்டு சென்றிருக்கிறார் அந்த முதியவர். இப்படிப்பட்ட சம்பவங்களும் கேரளாவில் சகஜம்.தங்குவதற்கு வீடில்லாமல் தெருக்கோடியில் நாதியில்லாமல் எத்தனையோ பேர் வசிக்க… பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட வீடுகள் தங்குவதற்கு நாதியற்று தெருவில் நிற்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.