ஆளுநர்கள் நியமனத்தைச் சவாலுக்குட்படுத்தமாட்டோம்! – ‘மொட்டு’ தெரிவிப்பு.

ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை எமது கட்சி சவாலுக்குட்படுத்தாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மாகாணங்களுக்குரிய தமது பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவே செயற்படுகின்றனர். எனினும், தற்போதைய நிலைமையானது, மாகாண சபை முறைமை உருவாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

தமது பகுதிக்குரிய தீர்மானங்களை தமது பிரதிநிதிகள் ஊடாக மக்கள் எடுப்பதற்காகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. மாகாண சபை முறைமை செயற்பட்டாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதிகாரம் முழுவதும் ஆளுநர் வசம் இருப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடைய விடயம் அல்ல.

ஒரு ஆளுநரின் செயற்பாடு திருப்தி இல்லையெனில் அவரை நீக்குவதும், புதியவரை நியமிப்பதும் ஜனாதிபதிக்குரிய அதிகாரம். அந்த விடயத்தில் கட்சி என்ற அடிப்படையில் நாம் தலையீடுகளை மேற்கொள்ளமாட்டோம்.

அமைச்சரவை நியமன விடயத்திலும் அப்படித்தான். குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கினால் நல்லது என யோசனை முன்வைத்தோமே தவிர அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.