பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி.

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இந்நிலையில் நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கரண் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் கரண் சர்மா 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய மன்கட் 26 ரன், ஸ்டோய்னிஸ் 0 ரன் ஏதும் எடுக்காமலும், குருணால் பாண்ட்யா 9 ரன்கள், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 28 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த பூரன், பதோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் பூரன் 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் அரைசதம் அடித்த நிலையில் 58 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வைபர் அரோரா, தாக்கூர் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடியாக துவங்கிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் வெங்கடேஷ் ஐயர் 24 (15) ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஜேசன் ராய் 45 (28) ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய குர்பாஸ் 10 ரன்களும், ஆண்ட்ரூ ரசல் 7 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 3 ரன்னும், சுனில் நரைன் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிந்தனர். வெற்றிபெற 12 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டநிலையில் வாணவேடிக்கை காட்டிய ரிங்கு சிங் 27 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 67 (33) ரன்களும், வைபர் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு 3-வது அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முன்னேறி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.