அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரரின் வீடுகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீட்டில் காலை முதல் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

இதேபோன்று ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு அதிகாரிகள் சோதனையிட வந்தனர். அப்போது, காரில் இருந்து ஒரு பையை எடுத்துக் கொண்டு ஒரு அதிகாரி வீட்டிற்குள் நுழையும்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையில் என்ன உள்ளது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரியின் காரை உடைத்து சேதப்படுத்தினர். இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடாமலேயே திரும்பிச் சென்றனர். இதேபோன்று மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு உணவக உரிமையாளர் மணி, காளிபாளையம் பெரியசாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் விரட்டினர். இதனால், அந்தப் பகுதிகளில் சோதனை நடத்தாமல், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

அதேபோல கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் அரவிந்தின் பண்ணை வீடு மற்றும் கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினருடைய கல்குவாரியில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் நிறுத்தினர், சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் தடுத்ததால் பாதுகாப்பு கேட்டு அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கரூரில் 22 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 9 இடங்களில் சோதனை நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.