இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல்! – ஆபத்து என எச்சரிக்கின்றார் வீரசேகர.

“இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது இலங்கைக்கு ஆபத்தாக அமையும். இது தொடர்பில் இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் சந்திக்கவுள்ளனர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை மறுத்துள்ள நிலையிலும், சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தியாவில் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகள் செயற்படுகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்க் கட்சிகள் சந்திப்பதற்குத் திரைமறைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தினர் செயற்படுகின்றனர்.

தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டுமெனில் இந்தியத் தரப்பினர் இலங்கை அரசுடன் பேச வேண்டும். அதேவேளை தமிழ்க் கட்சிகளும் தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டுமெனில் இலங்கை அரசுடன் பேசவேண்டும். அதைவிடுத்து இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஆபத்தாக அமையும். இது தொடர்பில் இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.