யாழில் பொருளாதார நெருக்கடியின் எதிரொலி: பாடசாலையிலிருந்து மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலையிலிருந்து மாணவர்களின் இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் 355 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 113 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 60 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 20 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 351 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் அது 35 ஆகக் குறைவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 170 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 137 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 390 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 312 ஆக அதிகரித்துள்ளது.

தென்மராட்சி கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 14 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 92 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 59 ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சி கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 72 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 25 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 87 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது.

பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வராமல் விடும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 9ஆம் மற்றும் 10ஆம் தரத்துடனேயே அதிகளவானோர் இடைவிலகுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துரைக்கையில்,

“பாடசாலையிலிருந்து மாணவர்களின் இடைவிலகலை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. இந்த விடயத்தை மானசீகமாகச் செய்ய வேண்டும். பாடசாலை இடைவிலகல் ஊடாக எமது இளம் சமுதாயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றது. எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகின்றது. பாடசாலை இடைவிலகலைக் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது. ஒவ்வொரு காரணங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது.

நான் அதிபராக இருந்த காலத்தில் கிளிநொச்சியில் அருவி வெட்டுக் காலங்களில் மாணவர்களைப் பெற்றோர்கள் வயலுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அவர்கள் பாடசாலைக்கு வரமாட்டார்கள். அப்படியான சூழலில், பாடசாலைக்கு மாணவர்களை நேரம் தாழ்த்தி வருவதற்கு நான் அனுமதித்திருந்தேன். அத்துடன் ஒரு நாள் அல்லது இரு நாள்கள் விடுப்பில் இருப்பதற்கும் அனுமதித்தேன்.

இவ்வாறு களச் சூழலை உணர்ந்து அதிபர்கள், அதிகாரிகள் கடமையாற்றுவதன் ஊடாகவே இடைவிலகலைக் கட்டுப்படுத்தலாம். இதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.