முன்னாள் எம்.பி. தோமஸ் வில்லியம் தங்கத்துரை காலமானார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை (வயது 79) (06) காலமானார்.

அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தமிழ் அரசுக் கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்தியதற்கு அப்பால், அம்பாறை மாவட்ட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட சமூக சேவையாளராகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டவர்.

அரசியலில் அனுபவ முதிர்ச்சி பெற்ற இவர், அம்பாறை மாவட்ட மக்களின் பிரதிநிதியாக மிகக்குறுகிய காலம் (2009 – 2010) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்தாலும், அந்தப் பதவிக் காலத்துக்கு முன்னரும், பின்னரும் மக்கள் நலன் சார்ந்தும், தமிழ்த் தேசியம் சார்ந்தும் நிறைவான பணிகளை ஆற்றியிருக்கின்றார்.

மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை தனது சீரிய சிந்தனை, நேர்த்தியான செயல் நோக்கு என்பவற்றின் அடிப்படையில் சமூக மதிப்பு மிக்க மனிதனாகவும், தன்னலம் கருதாத மக்கள் சேவகனாகவும் வாழ்ந்து மறைந்துள்ளார்.

அன்னாரின் இறுதி நல்லடக்கம் நாளை (07) பிற்பகல் 4 மணியளவில் பாண்டிருப்பில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.