ஆஸ்துமா… வீஸிங்… நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

மனித உடலில் மூளை, இதயத்துக்கு இணையாக முக்கியமான மற்றோர் உறுப்பு நுரையீரல். சுவாசிக்கும் காற்றுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், எளிதில் நோய்த்தொற்றுகளுக்கு இலக்காகும் ஆபத்தும் நுரையீரலுக்கு உண்டு. அத்தகைய பாதிப்பை கோவிட் பெருந்தொற்றுக் காலம் நமக்கெல்லாம் காட்டியதை மறக்க முடியாது. நுரையீரலை பாதிக்கும் பிரச்னைகள், அறிகுறிகள், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் என அனைத்தும் பகிர் கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

நுரையீரலின் வேலை என்ன?

நுரையீரல் என்பது காற்றைச் சுத்தப்படுத்தும் ஓர் உறுப்பு. எல்லோருக்கும் இரண்டு நுரை யீரல்கள் இருக்கும். வெளியிலுள்ள ஆக்ஸி ஜனை நாம் சுவாசிக்கும்போது அது ரத்தக் குழாய்களுக்குச் செல்வதில் நுரையீரல் உதவி யாக இருக்கிறது. அதே நேரம் ரத்தத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதிலும் நுரையீரல் பங்கு வகிக்கிறது. இதைத்தான் சுவாசித்தல் என்கிறோம். இதைத் தவிர சிறு நீரகங்களுடன் இணைந்து, ‘ஆசிட் பேஸ் பேலன்ஸ்’ (Acid-Base Balance) என்கிற வேலை யையும் நுரையீரல் செய்கிறது. அதாவது ரத்தத்தில் உள்ள அமிலம் மற்றும் காரத்தன்மை யின் அளவை பிஹெச் பேலன்ஸ் என்கிறோம். உடலின் ஒவ்வோர் உறுப்பும் இந்த பிஹெச் பேலன்ஸை சார்ந்தே இயங்கும். அந்த பேலன்ஸை முறைப்படுத்துகிற வேலையைத் தான் சிறுநீரகமும் நுரையீரலும் செய்கின்றன.

நுரையீரல் பாதிப்புகளின் அறிகுறிகளை ஆறாகப் பிரிக்கலாம். இருமல், சளி, சளியுடன் ரத்தம், மூச்சுத்திணறல், சத்தத்துடன் கூடிய மூச்சுத்திணறல் (வீஸிங்) மற்றும் நெஞ்சுவலி. இந்த அறிகுறிகள் பிரச்னைக்கேற்ப மாறுபட லாம். உதாரணத்துக்கு, ஒருவருக்கு நிமோனியா பாதித்தால் அவருக்கு முதலில் காய்ச்சல் வரலாம். தாங்கமுடியாத நெஞ்சுவலி, பிறகு சளி போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுவே ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்புள்ளவர்களுக்கு தூசு சூழ்ந்த சூழலில் இருமல், சளி, வீஸிங் வரும். காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேல் இருமல், சளி, மாலை நேரத்தில் மட்டும் காய்ச்சல், எடை குறைவது, நோய் எதிர்ப்புத்திறனைக் குறைக் கும் நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். இருமும்போது தொடர்ந்து ரத்தம் வந்தாலும் அது காசநோயின் அறிகுறியாகவோ, புற்று நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம்.

டிபி எனப்படும் காசநோய் மற்றும், உடலில் எங்கு புற்றுநோய் இருந்தாலும் உடல் எடை குறையும். குறிப்பாக 5 கிலோ, 10 கிலோ வெல்லாம் குறைந்தால் காரணத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். சருமம் தொடங்கி, நுரையீரல் வரை எங்கு பிரச்னை இருந்தாலும் அதன் அறிகுறி நெஞ்சுவலியாக வெளிப்பட லாம். மூச்சை ஆழமாக இழுக்கும்போதோ, பலமாக இருமும்போதோ ஒருவருக்கு பக்க வாட்டில் குத்துகிற மாதிரியான வலி வந்தால் அதை `ப்ளுரிட்டிக் பெயின்’ (Pleuritic Pain) என்று சொல்வோம். இருபக்க நுரையீரலையும் மூடியிருக்கும் மெல்லிய சவ்வு `ப்ளுரா’ எனப் படும். நுரையீரலின் உள்ளே வெட்டினால்கூட வலியை உணர மாட்டோம். ஆனால், அதை மூடியிருக்கும் ப்ளுராவில் இரண்டு லேயர்கள் இருக்கும். அதன் வெளிப்புற லேயரில் வலி இருக்கும். அந்த வலிதான் முந்தைய வரியில் சொன்னது போல இருக்கும்.

மூச்சுத்திணறல்… வீஸிங்… இரண்டும் ஒன்றா?

இந்த இரண்டும் ஒன்றல்ல. மூச்சுவிடுதல் என்பது நம்மை அறியாமல் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். அதுவே எப்போது மூச்சு விடுவதை நாம் உணர்கிறோமோ, அது அசௌகர்யமாக இருக்கிறதோ, மூச்சுவிடும் போது அழுத்துகிற மாதிரி உணர்கிறோமோ அதுதான் மூச்சுத்திணறல். மூச்சுவிடும்போது ‘ங்கொய்…’ என்ற சத்தம் வந்தால் அது வீஸிங் எனப்படும்.

பச்சிளம் குழந்தைகளுக்கும் வீஸிங் ஏன்?

பெற்றோரில் இருவருக்கும் ஆஸ்துமா பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அந்தப் பிரச்னை வரலாம். சூழல் மாசும் ஒரு காரணம். சற்று வளர்ந்த குழந்தைகள் என்றால் உடல் பருமன், உடலியக்கமற்ற வாழ்வியல் முறை, அதன் காரணமாகக் குறையும் நோய் எதிர்ப்புத் திறன் போன்றவை காரணங்களாக இருக்கலாம். இது தவிர ‘ஹைஜீன் ஹைப்போ தெசிஸ்’ (Hygiene Hypothesis ) பாதிப்புக்குள்ளாகும், அதாவது அதீத சுத்தமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் போகலாம். இவர்களுக்கு அலர்ஜி தொடர்பான பாதிப்புகள் வரலாம்.

நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

தூசு, உணவுப்பொருள், வாசனை, வானிலை மாற்றம், ஸ்ட்ரெஸ், எடுத்துக்கொள்ளும் மருந் துகள் என ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள் எதுவாகவும் இருக்கலாம். ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளால் பாதிப்பு ஏற்பட லாம். எனவே தூண்டல் காரணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம். ஆஸ்துமாவின் ஆரம்பத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தபோது குறைந்தபட்ச மருந்துகளின் மூலமே பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும். பிறகு மருந்தின் தேவை குறைந்திருக்கும்.

தண்ணீருக்குக் கீழே உள்ள கடல்பாறை வெளியே தெரியாமல் இருந்ததால்தான் டைட்டானிக் கப்பல் அதில் மோதியது. அதை ‘ஐஸ்பெர்க்’ என்று சொல்வோம். ஆஸ் துமா பாதிப்பும் கிட்டத்தட்ட அப்படித்தான். உடலுக்குள் அலர்ஜியை ஏற்படுத்தும் செல்கள் அளவுக்கதிகமாக இருந்து, அலர்ஜி அல்லது இன்ஃபெக்‌ஷன் காரணமாக வெளியே தெரியும்போதுதான் நோய் வந்ததாக நினைத்துக்கொள்கிறோம். அது தவறு. எனவே மிகக் குறைந்த அளவிலாவது மருந்துகளை எடுத்துக்கொள்வதுதான் சரி.

மாத்திரை Vs இன்ஹேலர்… எது பெஸ்ட்?

இந்த இரண்டுக்குமான முக்கிய வித்தியாசம் டோசேஜ். மாத்திரையில் உள்ள மருந்தானது மில்லிகிராமில் இருந்தால், இன்ஹேலரில் மைக்ரோ கிராமில் இருக்கும். அந்த வகையில் இன்ஹேலர் பாதுகாப்பானது. மாத்திரையாக விழுங்கும்போது அது வயிற்றுக்குள் சென்று செரிக்கப்பட்டு, கல்லீரலுக்குப் போய் பிறகு தான் செயலாற்றும். அதுவே இன்ஹேலர் உபயோகிக்கும்போது மருந்தானது நேரடியாக நுரையீரலுக்குள் செலுத்தப்படுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இன்ஹேலரில் பயன்படுத்தப்படும் பிராங்கோ டைலேட்டர், சுவாசக்குழாயை விரிவுபடுத்தக்கூடியது.

அடிக்‌ஷனாக மாறுமா இன்ஹேலர் பயன்பாடு?

இன்ஹேலர் பயன்படுத்தும் விதம் மிகவும் முக்கியம். இன்ஹேலர் உபயோகித்ததும் வாய் கொப்பளித்துவிட வேண்டும். இன்ஹேலரில் பக்க விளைவுகள் இருக்காது. எனவே மருத் துவர் உங்கள் ஆஸ்துமா பிரச்னைக்கு இன் ஹேலர் பரிந்துரைக்கிறார் என்றால் அதை நெகட்டிவ்வாக பார்க்கத் தேவையில்லை. அந்த மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டு, ஆஸ்துமாவின் தீவிரமில்லாமல் உணர்ந்தாலோ, உங்கள் அன்றாட வேலைகள் பாதிக்கப்படாமல் இயல்பாக இருக்க முடிந் தாலோ, இரவுத்தூக்கம் பாதிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம். அதன் பிறகு உங் களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் அளவுகள் குறைக்கப்படும். மிக மிக குறைந்த அளவில் மருந்துகளைத் தொடர்ந்தால் போது மானதாக இருக்கும். எனவே வாழ்நாள் முழுக்க மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமா, அது அடிக்‌ஷனாக மாறிவிடுமா என்றெல்லாம் நெகட் டிவ்வாக பார்க்க வேண்டிய தேவையில்லை.

செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் வருமா?

செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் `இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ்’ (Interstitial lung disease) இரண்டும் பாதிக்க வாய்ப்புகள் அதிகம். பூனை வளர்ப்ப வர்கள் வீடுகளில் அது அவர்களோடு படுக்கை யில் தூங்கும், எந்நேரமும் கூடவே இருக்கும் என்ற நிலையில் அது நிச்சயம் நல்லதல்ல. ஆஸ்துமா, வீஸிங் பாதிப்புள்ளவர்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.அதைவிட ஆபத்தானது வீடுகளில் வளர்க்கும் கிளி, புறா போன்றவை. வீட்டுக்குள் இவற்றை வைத்து வளர்க்கும்போது `சீட்டாகோசிஸ்’ (Psittacosis) என்கிற தொற்றும் `ஹைப்பர் சென்சிட்டிவிட்டி நிமோனிட்டிஸ்’ (Hypersensitivity Pneumonitis) எனப்படும் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, வீட்டுக்குள் பறவைகள் வளர்ப்பதைத் தவிர்க்கவும்.


நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

Leave A Reply

Your email address will not be published.