ஷ்ரத்தா கொலையைப் பார்த்து காப்பியடித்தேன்: மும்பை கொலையாளி வாக்குமூலம்

மும்பையில், சேர்ந்து வாழ்ந்துவந்த பெண்ணை கொலை செய்த கொலையாளி மனோஜ் சானே (56), தில்லியில் நடந்த ஷ்ரத்தா வாக்கர் கொலைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு, அதைப்போலவே தானும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையில், மிரா சாலையில், வாடகை வீட்டில் தன்னுடன் குடியிருந்து வந்த சரஸ்வதி வைத்தியா (34) என்ற பெண்ணை, கொலை செய்து, உடல் பாகங்களை துண்டுத் துண்டாக வெட்டி வீசிய சம்பவத்தில் மனோஜ் சானே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தில்லியில் ஷ்ரத்தா வாக்கரை, ஒன்றாக வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா கொன்று, உடல்பாகங்களை துண்டுத் துண்டாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் குறித்து படித்ததாகவும், அந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு, அதுபோலவே கொலை செய்ததாகவும் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனோஜ், சரஸ்வதியின் உடல் பாகங்களை துண்டுத் துண்டாக வெட்டி குக்கரில் வைத்து சமைத்து, அதனை வெளியே வீசியிருக்கிறார். உடல் பாகங்கள் கெட்டுப்போகாமல் இருக்க இவ்வாறு செய்திருக்கிறார். ஆனால், கொலை நடந்து ஓரிரு நாள்களில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் மனோஜ் செய்த கொலை வெளிச்சத்துக்கு வந்தது.

அஃப்தாப் போலவே, இவருக்கும் எதிராக, வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராதான் முக்கிய சாட்சியமாக விளங்குகிறது.

மனோஜ் வீட்டிலிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் பொருள்களில், நீலகிரி தைல பாட்டில்கள், 1 சுத்தியல், 1 கட்டர், சதைக்கப்பட்ட மனித உடல் பாகங்களுடன் இருந்த குக்கர், மனித உடல் பாகங்களை எடுக்கப் பயன்படுத்திய ஸ்பூன்கள், மனித உடல்பாகங்களுடன் இருந்த பாக்கெட்டுகள், மனித உடல் பாகங்களை வறுக்கப் பயன்படுத்திய கடாய், துர்நாற்றத்துடன் இரண்டு பிளாஸ்டிக் கவர்கள் அடங்கியுள்ளனர்.

இதுவரை கொலை செய்யப்பட்டவர் பயன்படுத்திய கைப்பேசி மற்றும் கொலை நடந்த போது இருவரும் அணிந்திருந்த ஆடைகள் கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.