மோடிக்குக் கடிதம் எழுதும் படலம் தமிழ்க் கட்சிகளால் மீண்டும் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது, தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மூலம் அழுத்தம் கொடுக்கும் நகர்வை மேற்கொள்வதென ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

வவுனியாவில் நடந்த அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, இணைந்த வடக்கு – கிழக்கில் அதிகபட்ச அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும்படியும் – இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டுமென்றும் தமிழ்க் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தும் முயற்சியை ஆரம்பிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தி அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கையெழுத்திட்ட கடிதமொன்றை இந்தியப் பிரதமர் மோடிக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளையும் இணைத்து இந்தக் கடிதத்தை அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் பேச்சு நடத்தி, கடித விவகாரத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் நிறைவேற்றுக்குழு ஒப்படைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.