வாக்னர் படை தலைவர் மீண்டும் ரஷியாவிலா? – பெலாரஸ் அதிபரின் தகவலால் பரபரப்பு.
ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். இவர் சென்ற மாத இறுதியில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியுற்றது. இவருக்கு எதிராக புதின் அதிரடி காட்ட தொடங்கிய வேளையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தலையீட்டால் ஏற்பட்ட சமாதான முயற்சியால், ரஷியாவை விட்டு வெளியேறினார்.
புதினுடனான ஒப்பந்தத்தின்படி பிரிகோசின், பெலாரஸ் நாட்டுக்கு சென்றதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் ரஷியாவில்தான் இருக்கிறார் என பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கூறியுள்ளார். “யெவ்ஜெனி பிரிகோசின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கிறார். இன்று காலை அவர் மாஸ்கோ நகருக்கோ அல்லது வேறு இடத்திற்கோ பயணிக்கலாம். ஆனால், அவர் இப்போது பெலாரஸ் பிரதேசத்தில் இல்லை” என சர்வதேச ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பின்போது லுகாஷென்கோ தெரிவித்தார்.
இதற்கிடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பிரிகோசினின் அலுவலகத்திலும், அவரது இல்லத்திலும் காவல்துறை சோதனை நடத்தியதை காட்டும் காட்சிகளை ரஷியா வெளியிட்டது. இந்த காட்சிகளில் தங்கம், பணம், விக், ஆயுதங்கள் மற்றும் பல்வேறு மாற்றுப்பெயர்களில் பிரிகோசினுக்கு சொந்தமான பல பாஸ்போர்ட்கள் அந்த அலுவலகத்தில் இருப்பதாக காட்டப்பட்டது. ரஷிய அரசிலுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடும் வழக்கத்தை ரஷியா கடைபிடிப்பதாக மனித உரிமை வழக்கறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.