தனி ஆளாக போராடி உலக கோப்பை தொடருக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து.

உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பெரிங்டன் 64 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீடே அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் பாஸ் டி லீடே அதிரடியாக ஆடி சதமடித்தார்.

விரைவில் இலக்கை எட்டினால் உலக கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், பொறுப்புடன் ஆடினார். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த பாஸ் டி லீடே-சாகிப் ஜுல்பிகர் ஜோடி 113 ரன்கள் சேர்த்தது. 43-வது ஓவரில் ரன் அவுட்டான அவர் 92 பந்தில் 5 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 123 ரன்கள் குவித்தார்.

இறுதியில் நெதர்லாந்து அணி 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கும் நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. ஏற்கனவே இலங்கை அணியும் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.