சரத் வீரசேகரவின் கருத்துக்கு இந்து மகா சபை கடும் கண்டனம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மிக மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு சரத் வீரசேகரவின் கருத்துக்கு இந்து மகா சபை கடும் கண்டனம்!
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் நீதிபதி என விளித்து அச்சுறுத்தும் எச்சரிக்கை வசனங்களை நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டமை மிக மோசமான இனவாதம். அது மட்டுமன்றி நீதிமன்றத்தின் உயரிய மாட்சிமைக்கு பங்கம் விளைக்கும் அதி தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்த வழிகோலுகின்ற வகையில் அவரது உரை அமைந்திருக்கின்றது.

ஆதிகாலம் தொட்டு தமிழர்கள் வழிபட்டு வந்த ஆதி சிவன் கோவிலின் திரிசூலம் பற்றியும் மிகத்தவறான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மிகத் தொன்மையான ஆதி சிவன் கோவில் அமைந்திருந்தையும் மிகப் பெரிய ஆவுடையார் உள்ளிட்ட சிவலிங்க பாகங்கள் நந்தி போன்றன மீட்கப்பட்டு இருந்ததையும் மேல்நாட்டு தொல்லியல் அறிஞர்களான எச்.பி.பெல், லூயிஸ் ஆகியோர் கடந்த நூற்றாண்டிலேயே அகழ்வாராய்ச்சிகளுடன் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இன்று முற்றிலும் சைவத்தமிழர் வசிக்கும் இடத்தில் அவர்களின் வழிபாட்டுரிமைக்கு சவால் விடும் செயற்பாடுகளில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அடாவடியாக ஈடுபட முனையும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகரவுக்கு நீதிமன்ற உத்தரவுகள் விசனத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அதன் வெளிப்பாடே நாடாளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து நீதிபதியை இனவாத நோக்கில் அவமதித்து அச்சுறுத்தும் வார்த்தை பிரயோகம் அடங்கிய அவரது உரையாகும்.

இன, மத நல்லிணக்கத்தையும் உயரிய நீதிமன்ற மாண்பையும் காக்கும் வகையில் நாட்டின் சகல முற்போக்கு சக்திகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டுவதுடன் சபாநாயகர் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் சைவத்தமிழ் மக்கள் சார்பாகவும் நீதிமன்ற மாண்பை மதிக்கும் நாட்டின் பிரசைகள் சார்பாகவும் வேண்டி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.