இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்…!

ஆந்திராவில், இளைஞர் ஒருவரை கொடூரமாகத் தாக்கி அவர் மீது ஒரு கும்பல் சிறுநீர் கழிக்கும் திடுக்கிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர் மீது பாஜக இளைஞர் அணி நிர்வாகி சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த காணொலி கடும் கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பாதிக்கப்பட்ட நபரை வரவழைத்து அவருடைய கால்களை கழுவி மன்னிப்பு கேட்டார்.

இதேபோல், ஒரு திடுக்கிடும் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர்கள் நவீன், ராமானுஞ்சேயலு. இவர்கள் கூட்டு சேர்ந்து அந்த பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இருவருக்கும் இடையிலான விரோதம் நாளுக்குநாள் வளர்ந்து வந்தநிலையில், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நவீன் மீது ராமானுஞ்சேயலு கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் நவீனை, ராமானுஞ்சேயலு மற்றும் அவருடைய கூட்டாளிகள் உள்ளிட்டோர் விரோதத்தை மறந்து நண்பர்களாக இருக்கலாம் எனக் கூறி மது அருந்த அழைத்துள்ளனர். இதனை நம்பி சென்ற நவீனை ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறத்தில் இருக்கும் காலி இடத்திற்கு அழைத்து சென்றனர். மூச்சு முட்ட குடித்து போதையில் தள்ளாடிய நவீனை ராமானுஞ்சேயலு மற்றும் அவரது கூட்டாளிகள் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர்.

அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நவீன் முகத்தின் மீது சுற்றி நின்று சிறுநீர் கழித்தனர். இந்த சம்பவத்தை அவர்களுடைய கூட்டாளிகளில் ஒருவர் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

படுகாயம் அடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் நடைபெற்ற சம்பவம் குறித்து ஓங்கோல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அதன் பின் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. .

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆந்திரா முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.