தேசிய மட்ட நீச்சல் போட்டியின் வடமாகாண அணியில் கிளி, யாழ் நீச்சல் வீர வீராங்கனைகள் பங்கேற்பு!

47வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.

குறித்த தேசிய மட்ட தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக இடம்பெறவுள்ள நீச்சல் போட்டியில் முதன்முறையாக வடமாகாண அணி கலந்துகொள்கின்றது.

இவ் வடமாகாண அணி சார்பில், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வீர வீராங்கனைகளும், யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 10 வீர வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், குறித்த வீர வீராங்கனைகளை ஊக்குவித்து வாழ்த்தி வழி அனுப்புகின்ற நிகழ்வு இன்றைய தினம்(24) கிளிநொச்சி நகர்ப்பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாக வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு, குறித்த வீர வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் முகமாக வாழ்த்துரைகளை வழங்கியிருந்தார்.

மேலும் இதன்போது நீச்சல் வீர வீராங்கனைகளுக்கு நீச்சல் விளையாட்டுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதி அனுசரனையினை World Vision நிறுவனம் வழங்கியுள்ளது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்றுனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.