ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வென்று அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் ஜப்பான்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம். இப்போட்டியின் துவக்கம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஜப்பான் அணிக்கு 8வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் யமடா கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. பதில் கோல் அடிக்கும் முயற்சியில் சீன வீரர்கள் முன்னேறினர். ஆனால் அவர்களின் முயற்சியை ஜப்பான் வீரர்கள் முறியடித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி வாய்ப்புகள் கிடைத்தும் கோலாக்க முடியவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜப்பான் வீரர் புகுடா கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 59வது நிமிடத்தில் ஜப்பானின் தடுப்பாட்டத்தை முறியடித்த சீனா ஆறுதல் கோல் அடித்தது. இந்த கோலை சோஜு பதிவு செய்தார். இறுதியில் 2-1 என ஜப்பான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, பாகிஸ்தான் அணிகளும் 5 புள்ளிகளுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன.

சீனா ஒரு புள்ளி மட்டுமே பெற்று 6வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றபோதிலும், -2 என்ற குறைவான கோல் வித்தியாசத்தின் காரணமாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளின் முடிவைப் பொருத்து ஜப்பான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

இன்று நடைபெறும் போட்டியில் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ அல்லது தென் கொரியா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலோ ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேறும்.

Leave A Reply

Your email address will not be published.