16 வயது சிறுமியை தந்தையே கொன்று பைக்கில் இழுத்துச் சென்ற கொடூரம்…!

பஞ்சாப் மாநிலத்தில் பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு நாள் வெளியே தங்கிய 16 வயது சிறுமியை தந்தையே ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட முச்சால் என்ற கிராமத்தில் நிஹாங்க் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இதில், 16 வயதான சிறுமி, 12-ஆம் வகுப்பு படித்துவந்தார்.

அந்த சிறுமி கடந்த புதன்கிழமை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வியாழக்கிழமை அவர் வீடு திரும்ப ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெற்ற மகளையே தந்தை கத்தியால் குத்திக் கொன்றதுடன் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளார்.

மகளைக் கொன்று உடலை இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டி தர தரவென அந்த நபர் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது. வேறு நபருடன் வெளியில் ஒரு நாள் தங்கியதால் தனது மகளை கொலை செய்ததாகவும், கவுரவத்துக்காகவே இதனை செய்ததாகவும் நிஹாங்க் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

சிசிடிவி காட்சியில் மகளை பைக்கின் கேரியரில் கயிற்றால் கட்டி, அவரை தரதரவென்று தந்தை இழுத்துச் செல்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த பதிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மகளை கொன்ற தந்தை குறித்து ஊர்மக்கள் கூறுகையில், ‘சின்ன விஷயங்களுக்கும் அவர் பிள்ளைகளையும், மனைவியையும் அடிப்பார்.

அவர் எப்போதும் கோபத்துடனேயே காணப்படுவார். மகள் வெளியே சென்றதில் இருந்து மிகுந்த கோபத்துடன் காணப்பட்ட அவர், மகள் வந்த பின்னர் அவரை கூர்மையான ஆயுதத்தால் கொன்றுள்ளார்’ என்று தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.