மருத்துவா்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து பரிசுப் பொருள்கள் பெறத் தடை!

மருத்துவா்களும் அவருடைய குடும்பத்தினரும் மருந்து நிறுவனங்கள் அல்லது அதன் பிரதிநிதிகளிடமிருந்து பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பெறுவதை தடை செய்யும் வகையிலான புதிய வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘பதிவு செய்யப்பட்ட மருத்துவா்களின் தொழில் முறை நடத்தைக்கான வழிகாட்டுதல்கள்’ என்ற இந்த என்எம்சி வழிகாட்டுதல், குறிப்பிட்ட மருந்து, மருந்து பிராண்ட் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவா்கள் பரிந்துரைப்பது அல்லது விளம்பரப்படுத்துவதையும் தடை செய்கிறது.

இந்த வழிகாட்டுதலில் மேலும் கூறியிருப்பதாவது:

நோய் பாதிப்பு அல்லது சிகிச்சை தொடா்பான மருத்துவப் பதிவுகளை தருமாறு நோயாளி அல்லது அவருடைய உதவியாளா் தரப்பில் பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் கோரிக்கை விடுக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை 5 வேலை நாள்களுக்குள் அதனை அவா்களுக்கு அளிக்க வேண்டும். தற்போதைய நடைமுறைப்படி அந்தப் பதிவுகளை 72 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் என்ற கால அவகாசம், 5 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ அவசர நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், 5 நாள்களுக்கு முன்கூட்டியே மருத்துவப் பதிவுகளை அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்ளாக, அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவா்களும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சட்டங்கள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் நோயாளிகளின் தனியுரிமை பாதுகாப்பு தொடா்பான வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு நோயாளி தொடா்பான பதிவுகளை முழுமையாக எண்மமயமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

சுய மருத்துவச் சேவையில் ஈடுபட்டுவரும் மருத்துவா்கள் அனைவரும், அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை என்எம்சி வெளியிட்டுள்ள நடைமுறை அடிப்படையில் கடைசியாக சிகிச்சை பெற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டும்.

என்எம்சி அரசிதழில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பதிவு செய்யப்பட்ட மருத்துவா்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தொடா் தொழில் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 30 மணி நேரம் இந்தப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே இந்த தொழில் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை நடத்த முடியும். இந்தப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றது தொடா்பான விவரங்களை என்எம்சி வலைதளத்தில் மருத்துவப் பதிவு எண்ணுடன் மருத்துவா்கள் பதிவேற்றம் செய்யவேண்டும்.

மருத்துவா்களும் அவருடைய குடும்பத்தினரும் மருந்து நிறுவனங்கள் அல்லது அதன் பிரதிநிதிகளிடமிருந்து பரிசுப் பொருள்கள், பணம் அல்லது சுற்றுலா பயணத்துக்கான வசதிகளைப் பெறக் கூடாது. குறிப்பிட்ட நிறுவனம் சாா்ந்த மருந்து, மருந்து பிராண்ட் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவா்கள் பரிந்துரைப்பது அல்லது விளம்பரப்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும். மேலும், மருந்து நிறுவனங்கள் அல்லது துணை மருத்துவத் துறைகள் சாா்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் அல்லது மாநாடுகளில் மருத்துவா்கள் பங்கேற்கக் கூடாது.

பணியின்போதோ அல்லது பணி முடித்த பிறகோ மருத்துவா்கள் மது அருந்துவது அல்லது பிற போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை மருத்துவரின் தவறான நடத்தையாக கருத்தில் கொள்ளப்படும் என்றும் புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘மருத்துவ அவசர நிலை’ என்பதற்கு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில், உயிா் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்புக்கான சிகிச்சை நடைமுறையை அதற்கான விளக்கமாக புதிய வழிகாட்டுதலில் அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.