திருப்பதியில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

திருப்பதி மலைப் பகுதியில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைகளில் ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனப்பகுதிகளில் வசிக்கும் சிறுத்தைகள், திருப்பதி மலைக்கு பாதயாத்திரை ஆக நடந்து செல்லும் பக்தர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பக்தர்கள் ஆகியோரை வெகுவாக அச்சுறுத்தி வருகின்றன. திருப்பதி மலையில் உள்ள அலிப்பிரி வழிநடைபாதை, வாகனங்கள் செல்லும் சாலை ஆகியவற்றில் ஐந்து இடங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டது.

அலிப்பிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டது.

இந்நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். அந்த கூண்டுகளில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில், கடந்த 14ஆம் தேதி மற்றொரு பெண் சிறுத்தை சிக்கியது. இந்த நிலையில் நேற்று இரவு மூன்றாவதாக சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.

சிறுத்தை பொறியில் சிக்கியது பற்றிய தகவல் அறிந்த வனத்துறையினர், இரவு நேரம் ஆனதால் அங்கு செல்வதை தவிர்த்து இருந்தனர். வனத்துறையினர் இந்த செயலுக்கான காரணம் பற்றி கேட்டபோது, ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கி கொண்டால் அதன் ஜோடி சிறுத்தை அதே பகுதியில் வெகு ஆக்ரோஷமாக சுற்றி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் யாராவது அங்கு சென்றால் அது கொடூரமான தாக்குதலை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தனர். திருப்பதி மலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அவற்றில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் ஆச்சரியப்பட வைக்க வகையில் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.