பெண்களை மயக்கமடைய வைத்து கொள்ளையடித்த கும்பல் ஹட்டனில் கைது

நேற்று முன்தினம் (19) ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் , பெண்களிடம் நகைகளை அபகரித்த, திருடர்கள் குழுவொன்றை போலீசாரால் கைது செய்ய முடிந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் திட்டமிட்டு தங்கப் பொருட்களை கொள்ளையிட்டு பல பொலிஸ் நிலையங்களில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி ஹட்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு வந்த பெண் ஒருவர் அங்குள்ள மற்றுமொரு பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அப்படி பழகிய பெண், திருவிழா முடிந்ததும் வந்த அதே முச்சக்கர வண்டியில் தனது புதிய தோழியை வீட்டில் இறக்கிவிட முன்வந்துள்ளார்.

பின்னர் முச்சக்கரவண்டியில் மேலும் இரண்டு இளைஞர்களுடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹட்டன் திக் ஓயா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பெண் , தனது புதிய பெண் நண்பிக்கு மயக்கமடையக் கூடிய பானம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர், கொள்ளையர்கள் மயக்கமான பெண்ணிடம் இருந்த, சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ½ பவுண்கள் பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்து விட்டு திக் ஓயா சஞ்சிமலை வீதியில் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் அவரை விட்டு சென்றுள்ளனர்.

மயக்கமடைந்த பெண்ணை அந்த வீதியில் பயணித்த சிலர் கண்டு , திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பெண் சுயநினைவு திரும்பியதை அடுத்து சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்து முதலில் முச்சக்கர வண்டியைக் கண்டு பிடித்துள்ளனர்.

அதை வைத்து , திருட்டில் ஈடுபட்ட மேலும் இரு சந்தேக நபர்களையும், பெண் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸாரால் கைது செய்ய முடிந்துள்ளது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்களிடம் இருந்த , திருடப்பட்ட 2 ½ பவுன் தங்க நகையும், 60000/= ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களாவார்கள். சந்தேக பெண் நபர் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்தவர்.

சந்தேகநபர்கள் 27 – 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவ்வாறான பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பல பொலிஸ் நிலையங்களால் தேடப்பட்டு வருபவர்கள் எனவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் உள்ள ஏனைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.