கொள்ளையடித்தே கோடீஸ்வரர்கள் ஆன பலே திருடர்கள்….அதிர்ச்சிக்குள்ளான போலீஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல்நிலையத்திற்கு ஒருவர் புகார் ஒன்றை அளித்தார் அதில், தான் ஒரு ஆட்டோவில் சென்ற போது தன்னைத் தாக்கிவிட்டு மூன்று பேர் தன்னுடைய உடைமைகளை பறித்துச் சென்றுவிட்டதாக கூறினார். அவர் கொடுத்த அடையாளங்களை வைத்து வீருநாத் மற்றும் சந்தோஷ் ஆகியோரை விசாரிப்பதற்காக கோட்வாலி காவல்நிலைய போலீசார் சென்றுள்ளனர்.

அங்கு சென்று சந்தோஷ் வசித்து வரும் வீட்டைப் பார்த்து அசந்து போனார்கள் காவல்துறையினர். ஏனென்றால் ஐந்து மாடிகள் கொண்ட பங்களாவில் வசித்து வந்துள்ளார் சந்தோஷ். அந்த பங்களாவின் மதிப்பு 10 கோடி ரூபாயாம். இதைத் தொடர்ந்து வீருநாத் மற்றும் சந்தோஷ் காலிபா, அஜய் காலிபாவை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு ஆடிப்போனார்களாம் காவல்துறையினர்.

அவர்கள் மூன்று பேரும் பகலில் ஆட்டோ ஓட்டுவது, ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருக்கும் நகை, பணத்தை வழிப்பறி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. கொல்கத்தாவில் இருந்து தங்க வியாபாரிகள் தங்க ஆபரணங்களை விற்பனை செய்ய ரயில் மூலம் பாட்னா வருவது வழக்கம். அப்படி ரயிலில் தங்கத்துடன் வரும் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களை தங்களது ஆட்டோவில் ஏற்றிச்செல்வார்கள். ஆட்டோவில் ஏற்கனவே ஒருவர் இருப்பார். ரயில் பயணி வந்து அமர்ந்தவுடன் மற்றொருவர் வந்து அமர்ந்து கொள்வார். பயணியை நடுவில் வைத்து அந்த பயணியிடம் பாக்கெட்டில் இருக்கும் பணம், தங்கம், வெள்ளியை கொள்ளையடித்துவிட்டு ஆட்டோவை வழியில் நிறுத்தி இறங்கிச்சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர் இந்த கொள்ளையர்கள்.

அப்படி இறங்கும் போது பயணி எதாவது பிரச்னை செய்தால் பயணியை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படி பிரச்னை செய்த ஒரு பயணியை தள்ளிவிட்டது தான் இப்போது வினையாக வந்து நின்றிருக்கிறது. இதுவரை கடந்த சில மாதங்களில் மட்டும் 12-க்கும் அதிகமானோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள் மூன்று பேரும். அவர்களிடமிருந்து 6.63 லட்சம் பணம், தங்கம், வெள்ளி, மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீருநாத் பல இடங்களில் கோடிகள் மதிப்புள்ள நிலம் வாங்கி இருக்கிறார். வீருநாத்திடம் விசாரித்த போது அவர்களின் முக்கிய தொழில் ஆடு திருடுவதாம். பகலில் கிராமங்களில் சுற்றிப்பார்ப்பதும், இரவில் சென்று ஆடுகளை திருடிச்சென்று மார்க்கெட்டில் விற்பனை செய்வதும் தான் இந்த கொள்ளையர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது என்கிறார் பாட்னா நகர காவல் ஆணையர் வைபவ் சர்மா.

வீருநாத் ஆட்டோ ஓட்டுவதில் திறமையானவர். அதனை பயன்படுத்தி பகல் நேரத்தில் மூன்று பேரும் சேர்ந்து ஆட்டோவில் ஏறும் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். திருடிய பிறகு மறுநாள் பத்திரிகையில் அது தொடர்பான செய்தி வந்திருக்கிறதா என்று மூன்று பெரும் பார்ப்பார்களாம். அப்படி செய்தி வந்திருந்தால், உடனே மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிடுவது வழக்கம். சந்தோஷை நாங்கள் கைது செய்ய சென்ற போது வீடு ஐந்து மாடிகள் கொண்ட பங்களாவாக இருந்தது. வீடு முழுக்க எல்இடி டிவி, குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

பங்களாவின் மதிப்பு 10 கோடி இருக்கும். இது தவிர 1.75 கோடி அளவுக்கு நிலங்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளது. கடந்த பிப்ரவரியில் இருந்து ஜூலை வரை 8 ஆட்டோ வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் சொத்து விபரங்களை சேகரித்து வருமான வரித்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூறியிருக்கிறார்கள் காவல்துறையினர்.

Leave A Reply

Your email address will not be published.