‘இந்தியாவில் 2.70 கோடி குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுவார்கள்’ – ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் 2.70 கோடி குழந்தைகள் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிக உடல் எடையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமே ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதற்கான பலன்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக ஜங்க் ஃபுட் எனப்படும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பண்டங்களை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

அதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு ஜஃங்க் உணவு பொருட்களை பள்ளி வளாகத்திற்கு 50 மீட்டர் சுற்றளவுக்கு வெளியேதான் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2.70 கோடியாக உயரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சிறுவர் சிறுமியரை குறி வைத்து உணவு நிறுவனங்கள் மார்க்கெட்டிங் செய்து வருகின்றன. மேலும், உணவு மற்றும் தின்பண்ட பாக்கெட்டுகளில் இருக்கும் பதார்த்தங்கள் எவற்றால் செய்யப்பட்டவை என்பது குறித்த தகவல்கள் குறைந்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் என்ன மாதிரியான பொருட்களை வாங்குகிறோம் என்ற தகவல் கிடைக்காமல் போகிறது.

இதேபோன்று ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு கலாசாரம் பெருகியிருப்பதும் குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம். இதனால் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்நிலையில் அதிக உடல் எடை பிரச்னையில் இருந்து இந்திய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை தொடக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.