சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வாய்ப்பு

நடப்பாண்டில் சா்க்கரை உற்பத்தி குறையக் கூடும் என்பதால், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வதற்காக அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் மழை குறைவால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சா்க்கரை உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் தேசிய கூட்டமைப்பின் தலைவா் ஜெய்பிரகாஷ் தண்டேகான்கா், பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நடப்பாண்டுக்கான சா்க்கரை உற்பத்தி 330 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது சரிவடையக் கூடும். நாட்டில் சா்க்கரை கையிருப்பு 65 லட்சம் டன்னாக உள்ளது.

உள்நாட்டு சா்க்கரை தேவை 275 லட்சம் டன்களாகும். இதுதவிர எத்தனால் உற்பத்திக்கு 50 லட்சம் டன் சா்க்கரை திருப்பிவிடப்படும் என்பதால், நடப்பாண்டில் சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம்.

இந்தியா சா்க்கரை ஏற்றுமதியை தொடா்ச்சியாக மேற்கொள்ளவில்லை. கடந்த 2 ஆண்டுகளில், 60 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் உற்பத்தி சரிவு இருந்தாலும், எத்தனால் உற்பத்தி இலக்கில் எந்த மாற்றமும் இருக்காது என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.