சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர்!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவாரியான வெற்றியை தர்மன் சண்முகரத்னம் பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காக் சோங் 15.7 சதவீத வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

ஒருவருக்கொருவர் மரியாதை என்பதைத் தனது கொள்கையாகவும் அன்னாச்சி பழத்தைத் தனது பிரசார சின்னமாகவும் கொண்டு தர்மன் இந்த தேர்தலை சந்தித்தார்.

அன்னாசி பழத்தை சின்னமாகக் கொண்டிருப்பது குறித்து அவர் கூறும்போது, அன்னாசி பழம் மிகவும் சுவையானது, அனைவராலும் விரும்பப்படுவது. மலாய் பண்டிகைகளின்போதும், மற்ற எல்லா விழாக்களிலும், எளிமையான அன்னாசிப்பழ பச்சடியைவிட சிங்கப்பூரில் ஒன்றுபட வைப்பது எது?

சீனர்களுக்கு, அன்னாசிப்பழம் அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். எனது தேர்தல் சின்னமாக அன்னாசிப்பழத்தை ஏன் தேர்வு செய்தேன் என்று உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு, அன்னாசிப் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் தியாமின் உள்ளது. இது மகிழ்ச்சியான ஹார்மோன்களைத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலிலில் வெற்றி பெற்றதும் தனது ஆதரவாளர்களுக்கு அன்னாசிப்பழங்களை தர்மன் சண்முகரத்னம் வழங்கினார்.

தர்மன் சண்முகரத்னம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவரது தந்தை கனகரத்னம் சண்முகரத்னம் சிங்கப்பூரின் பிரலமான நோயியல் நிபுணராக இருந்தவர். சிங்கப்பூரில் நோயியலின் தந்தை,” என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வொல்ப்சன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இதுபோக, அனைத்துலக நாணய நிதியத்தில் நிதியமைச்சர்களின் உயர்மட்டக் கொள்கை மன்றத்தில் தலைமைப் பொறுப்பு, ஜி20 பிரதிநிதித்துவக் குழுவின் தலைமை பொறுப்பு, பொருளியல் மற்றும் நிதிநிலைத் தலைவர்களின் உலக மன்றம் போன்ற பல நிபுணத்துவ அமைப்புகளைத் தலைமையேற்று வழிநடத்தியுள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து தனது முகநூலில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள தர்மன் சண்முகரத்னம், “எனக்கும் எனது கொள்கைக்கும் செலுத்தப்பட்ட வாக்குகளை சிங்கப்பூரின் நம்பிக்கைக்கான வாக்குகளாக பார்க்கிறேன்.

சிங்கப்பூர்வாசிகளான நாம் எவ்வாறு ஒன்றாக முன்னேறலாம் மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கலாம் என்பதற்கான நம்பிக்கையின் வாக்காக பார்க்கிறேன்.

பின்புலம், கல்வி ஆகியவற்றைக் கடந்து ஒருவரை மதிக்கக்கூடிய காலமாக எதிர்வரும் காலம் இருக்கும், இருக்க வேண்டும். நமது வெவ்வேறு நம்பிக்கைகள், கலாசாரங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக எதிர்காலம் அமைய வேண்டும்.

அப்போதுதான் நமது பன்முக கலாசார அடையாளத்தை ஆழமாக்க முடியும். ஒவ்வொரு தலைமுறையும் நமது தேசிய இருப்புகளிலிருந்து நம்பிக்கையையும் பயனையும் பெறும்விதமான எதிர்காலம் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்னம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தர்மன் சண்முகரத்னம் பிரதமராக விருப்பம் தெரிவித்த மக்கள்

பேச்சுத்திறமையும் புத்திக்கூர்மையும் உள்ள தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் மக்களால் மிகவும் மதிக்கப்படுபவராகவும் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார்.

அதனால்தான், அதிபர் தேர்தலில் போட்டியிட ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்து (பிஏபி) விலகுவதாக தர்மன் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தபோது, பல சிங்கப்பூர்வாசிகள் அவர் தனது திறமையை வீணடிப்பதாகக் குழப்பமடைந்தனர்.

சிங்கப்பூரின் கணிசமான நிதி கையிருப்புகளைப் பயன்படுத்துவதில் சில கருத்துகளைக் கொண்டிருப்பதைத் தவிர, அதிபர் பதவி சம்பிரதாயமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அரசால் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை சிங்கப்பூரில் உள்ளது.

அப்படியிருக்கும் அதிபரால் வெளிப்படையாக அவர் நினைத்ததைப் பேச முடியாது. எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பதற்கு ஏற்ற பதவியாக அதிபர் பதவி சிங்கப்பூரில் கருதப்படுகிறது. ஆனால், தர்மன் சண்முகரத்னத்தின் திறமை என்பது இதைவிட மேலானது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற உலகளாவிய நிறுவனங்களில் உயர்மட்ட கவுன்சில் பதவிகளை அலங்கரித்தவர் அவர்.

அவர் மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகினால் சர்வதேச அளவில் தனது முத்திரையைப் பதிப்பார் என்று சிங்கப்பூர் மக்கள் நினைத்தனர். அவர் பிரதமராகக் கூடும் என்றும் நம்பப்பட்டது. 2016ஆம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

பிரதமர் லீ ஆட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் துணை பிரதமராக இருந்த தர்மனின் நற்பெயர் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களைத் தடுத்து பிரதமரை பாதுகாத்தது.

மேலும், ஒரு சில அரசியல்வாதிகளைப் போல் அவர் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தார். பண்பான அரசியல்வாதியை விரும்பும் வாக்காளர்களிடம் இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் பிரதமராக வேண்டும் என்ற ஆவல் சிங்கப்பூர்வாசிகள் பலர் மத்தியிலும் நிலவியது.

நான் பிரதமர் பதவிக்கு ஏற்றவன் அல்ல – தர்மன்

தர்மன் சண்முகரத்னம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், பிரதமர் பதவிக்கு ஏற்ற ஆள் தான் இல்லை என்று தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டே இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பிரதமருக்கான ஆள் இல்லை. நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன். அது நான் அல்ல. என்னைப் பற்றி எனக்குத் தெரியும், நான் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், அது நான் அல்ல.

நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாகச் செயல்படுவேன். எனது இளைய சகாக்களுக்கு அறிவுரை கூறுவதில் சிறப்பாக இருப்பேன். பிரதமருக்கு ஆதரவாக இருப்பேன். ஆனால், பிரதமராக இருப்பதில் அப்படியில்லை,” என்று தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் சீனர்கள் அல்லாதவர்கள் அதிபர்களாக கடந்த காலங்களில் இருந்தபோதிலும், பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டு அதிபரான முதல் நபர் தர்மன் மட்டுமேயாகும்.

தேர்தலில் தர்மன் சண்முகரத்னத்தை எதிர்த்துப் போட்டியிட்ட இருவருமே சீனர்கள். தேர்தலுக்கு முன்னதாக, சமூக ஊடகங்களில் சிங்கப்பூருக்கு சீனத் தலைவர்களே தேவை என்பன போன்ற பதிவுகளைப் பார்க்க முடிந்தது.

தர்மன் சண்முகரத்தினத்தின் வெற்றியின் மூலம் இனவாதம் நிராகடிக்கப்பட்டிருப்பதை மக்கள் உணர்த்தியுள்ளதாகவும் முறையான பிரதிநிதித்துவத்திற்கான வெற்றியாகவும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.

– பிபிசி தமிழ்

Leave A Reply

Your email address will not be published.