கண்ணீரோடு லீ பெற்ற சிங்கப்பூர் தேசமே,தர்மனை அரியணை ஏற்றியது – ஜீவன்

சிங்கப்பூர் போராடிச் சுதந்திரம் பெற்ற நாடல்ல, உலகிலேயே வலுக்கட்டாயமாகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நாடு. மலேசியாவில் இருந்து பிரிந்த போது
சிங்கப்பூர் மிக மோசமான நிலையில் இருந்தது.

ஒரு இனத்தின் விகிதாசாரம் அதிகரிக்காமல், கலந்தும் வாழ வழி செய்தது
நாட்டில் இன – மதவாதங்கள் தோன்றாதிருக்கக் காரணமாயின.

மலேசியாவுடன் இணைந்தே சிங்கப்பூர் இருக்க வேண்டும் என லீ விரும்பினார். ஆனால் சிங்கப்பூரியர்களை அரசியல் ரீதியாக பிரதிநிதிப்படுத்திய மக்கள் செயற்கட்சியுடன் (People’s Action Party – PAP) கூட்டரசான மலேசிய அரசாங்கத்துக்கு ,  ஒத்துப் போக முடியாததால், அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அத்தீவை மலேசியாவில் இருந்து ‘கழட்டி விட்டார்’.  ஆனாலும் இன்றும் மலேசியக் கொடியில் உள்ள 14 நீள் பட்டைகளில் ஒன்று சிங்கப்பூரைப் பிரதிநிதிப்படுத்தும் பட்டையாக இருக்கிறது.

மக்கள் செயற்கட்சியின் (PAP) முற்போக்கும் தீவிரமும் நிறைந்த போக்கு மலாய்-இஸ்லாத்துக்கு முன்னுரிமை கொடுத்த கூட்டரசு ஆட்சிக்கு எப்போதும் இடையூறாகவே இருந்தது. மலேசியாவில் ஒரு மலாய் இஸ்லாமியரே பிரதமராக இருக்க முடியும் என்பது இன்று வரை எழுதி வைக்கப்படாத சட்டமாக இருக்கிறது.

சிங்கப்பூர் பிரிவதற்கு முன்னர் , டாக்சி தொழிற் சங்கம் ஒன்று மலேசியாவில் இருந்தது. டாக்சி தொழில் சங்க தலைவராக தேவநாயரே இருந்தார். 1951களில் கமீயுனிச சட்சி சார்பு ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகளாக பி.வீ.சர்மா , சீ.வீ. தேவன் போன்றோர் பணியாற்றினார்கள். அவர்தான் சமத் இஸ்மாயிலுடன் ஒன்றாக படித்த தேவன் நாயரை கமியூனிச கட்சிக்குள் கொண்டு வந்தவர்.

சமத் இஸ்மாயில் போராட்டம் ஒன்றில் கைதான போது, சிறையிலிருந்து விடுவிப்பதற்கு வழக்கறிஞராக வாதாட சென்ட். ஜோன்ஸ் தீவுக்கு சென்றார் லீ. அப்போதுதான் இவர்களுக்குள் பரிட்சயம் ஏற்பட்டது. லீயின் நெருங்கிய நண்பர்களில் எஸ். ராஜரத்தினம் (இலங்கையர்) , கோ கெங் சுவி, டோ டென் சை ஆகியோர் இருந்தனர்.

லீயின் குடும்பத்தோடு இறுதிகாலம் வரை இணை பிரியா நண்பர்களாக இருந்தவர்களில் எஸ். ராஜரத்தினமும் மிக முக்கியமானவர்.சிங்கப்பூர் துணை பிரதமராகவும் , லீயின் ஆலோசகராகவும் இருந்தார்.

இவர்களது தொழில் சங்க தொல்லைகளைத் தாங்க முடியாமலே இவர்களுக்கு சிங்கப்பூர் என்ற தீவை கொடுத்து மலேசியா துரத்தியது.

கண்ணீரோடு என்ன செய்வதென்றே தெரியாத நிலையோடு,  சிங்கப்பூரை பொறுப்பேற்ற லீயின் , அன்றை கண்ணீரில் உருவான தேசமே இன்றைய உலகை வியக்க வைக்கும் சிங்கப்பூர்.

வேண்டா பிள்ளையாக கையில் கிடைத்த நாட்டை உயர்வு நிலைக்குக் கொண்டு வர அனைவருடனும் இணைந்து முயற்சிகளை எடுத்தார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான்யூ.

பதினோராம் நூற்றாண்டில் சோழச் சக்ரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் கூட விஜய சாம்ராஜ்யத்தை வெற்றிகண்ட போது சிங்கப்பூரும் சோழர்கள் வசம் வந்ததாக சிலர் சொல்கிறார்கள். அந்த தேசத்தின் சிற்பி ஆனார் லீ.

சிங்கப்பூர் சுதந்திர நாடாக ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவிலிருந்து பிரிந்தது.

அதன் பின் சிங்கப்பூர், ஒரு சாத்தியமான தேசத்தை உருவாக்கும் சவாலை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், சிங்கப்பூர் குடியரசு தனி நாடாக உருவாகி, இன்று வரை மிகப்பெரிய செல்வாக்குள்ள மற்றும் வணிகத்தின் முக்கியப் புள்ளியாக சிங்கப்பூர் திகழ்கிறது.

சிங்கப்பூர் என பெயர் வரக் காரணம்


சிங்கப்பூர் சிங்கம் + ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாக கூறப்படுகிறது.

மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திராவின் மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு.

கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது.

குடியேற்றவாத ஆட்சி

1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பவர் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது.

 ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார்.

இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள் வருகையையும் ஊக்கப்படுத்தினார்.  இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது.

1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது.

1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர்.

மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர்.

ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர்.

இன்று சின்ன இந்தியா (லிட்டில் இந்தியா அல்லது சிராங்கூன்) என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறியப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.

1819 ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

1824 இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது.

1826 இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது யப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது.

1965 ஆகஸ்ட் 9 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்தது.

சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

1965ல் தனி நாடான சிங்கப்பூரின் முதல் சட்டம் ‘அரசுப்பணியாளர் நேர்மைச் சட்டம்’. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகக் கடுமையான குற்றங்கள் என அறிவிக்கப்பட்டன. ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை தருவதற்கு இச்சட்டம் பேருதவி புரிந்தது.

‘நாட்டை ஒரு சிறந்த நிறுவனம் போல் நடத்த வேண்டும். அதே நேரத்தில் அது மனித நேயம் கொண்டதாகவும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டதாகவும் மத – இனவாதமற்ற நாடாகவும் இருக்க வேண்டும்‘ என வலியுறுத்தினார் லீ.

ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன.

1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும் .

சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும்.

மதங்கள்
சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு.

33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும்,

18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர்.

எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர்.

15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். இசுலாமை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் ஆவர்.

டாவோயிசத்தை 11% மக்கள் பின்பற்றுகின்றனர்.

சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.
இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர் ஆவர்.

பௌத்த சமயத்தையும் டாவோயிசத்தையும் பெரும்பாலும் சீனர்களே பின்பற்றுகின்றனர்.

பௌத்தத்தின் மூன்று பிரிவுகளான மகாயாணம், வஜ்ராயணம், தேரவாததிற்கு இங்கு மடங்கள் உண்டு. பெரும்பாலோர் மகாயாணத்தை பின்பற்றுகின்றனர் . சீன மகாயாணமே இங்கு பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது.

மொழிகள்
ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும்.

சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர்.

சிங்கப்பூரில் வாழ்வோரில் பெரம்பாலானோர் சீனர்களாக இருந்தாலும் , தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.

சிங்கப்பூர் , மலேசியாவில் இருந்து பிரிந்த போது லீயுடன் இணைந்திருந்த சீனர்களுடன் , சரி சமமாக நாட்டை செழிப்பாக்குவதற்கு அதிகமாக தமிழர்களே பாடுபட்டனர். அந்த பெருமை எஸ். ராஜரத்தினம் (இலங்கையர்) , போன்றோரையே சாரும். அதனாலேயே தமிழுக்கு லீ மதிப்பளித்து , மலே மொழியோடு , தமிழையும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கினார்.

அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயையும் தேசிய மொழியாகக் கொண்டுள்ளது . அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன..

சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.. 20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது.

சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும். சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம் .

‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’ என்று கூறியவர் லீ.

விடுதலை அடைந்த சில ஆண்டுகளில் சீனர்களுக்கும் மலாய் இனத்தவர்களுக்கும் இடையே ஒரு கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த, 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும், இரண்டாண்டு ராணுவ சேவை ஆற் ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார் லீ. இது நாட்டில் அமைதி நிலவ வழி வகுத்ததோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி செய்தது.

“நான் செய்தவை எல்லாம் நல்லவையே என்று கூறவில்லை.ஆனால் அவை அனைத்துமே மிக உயர்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டவை “என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை’ என்று பலமுறை கூறியுள்ளார் லீ.

எந்த வளமும் இல்லாத ஒரு சிறிய தீவு, உலக அளவில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் லீ குவான் யூ என்ற வரலாற்று நாயகன்தான்.

சிங்கப்பூரின் துவக்கத்தில் தமிழர்களுக்கும் மிக முக்கியப் பங்குள்ளது.

சிங்கப்பூர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் தமிழர்களின் உழைப்பும் பங்கும் இருந்ததாலே இன்றும் தமிழர்கள் பாரம்பரியமாகச் சிங்கப்பூரில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் 10 சதவீத மக்களைக் கொண்ட இந்தியர்களுக்கு மதிப்பு அளித்து ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழுக்கு இடம் கொடுத்தவர் திரு லீ.

இங்கே அனைத்துமே செய்ய முடியும் ஆனால், கட்டுப்பாடான சுதந்திரத்தோடு. தான் இறந்த பிறகு தன்னுடைய வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று கூறி , அதனால் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குச் சிரமம் கூடும் என்றார் லீ.

நினைவுச் சின்னங்களில் தந்தை லீக்கு உடன்பாடில்லை.

சிங்கப்பூர் சிற்பியான லீ அவர்கள் , நாட்டுக்குள் பிரிவினை வாதங்கள் ஏற்படாதவாறு இருக்க , ஒரே இன மக்களை ஒரே இடத்தில் குழுமமாக வாழ விடவில்லை.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் இருந்த மக்கள் விகிதாசாரத்தை கணக்கிட்டு , கலந்து வாழும் முறையை செயல்படுத்தினார். ஒரே இனம் அல்லது மதம் அல்லது வெளியே இருந்து வந்தவர்கள் , ஒரே இடத்தில் இருந்தால் , குழு சண்டைகள் ஏற்படும் எனக் கணித்தார்.

சைனா டவுண் ,லிட்டில் இந்தியா (Serangoon Road) , அரபு தெரு , ( Chinatown, Little India and Arab street) போன்ற இடங்களை தவிர்த்து , ஏனைய பகுதிகளில் ஓரின மக்கள் ஒன்றாக குழுமமாக இருப்பதை காண முடியாது. கலந்தே வாழுகின்றனர். இங்கும் பெயரளவில் இருந்தாலும் ஏனையோரும் கலந்து உள்ளதை அவதானிக்க முடியும்.

இப்பகுதிகளையும் அழிக்க வேண்டும் என்ற சிந்தனை லீ இடம் ஆரம்பத்தில் இருந்தது. சில நண்பர்கள்  , நினைவு சின்னங்களாக அவற்றை ;ரக்க விடுமாறு வேண்டிக் கொண்ட போது அமைதியானார் லீ. ஆனால் அங்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமானால் அவற்றை இல்லாதொழிப்பேன் என அவர்களிடம் கடுமையாக தெரிவித்தார்.

அதேபோல சிங்கப்பூர் விடுதலை பெற்ற போது இருந்த அதே இன விகிதாசாரத்தை மிக லாவகமாக கையாளும் முறையை அவர் செயல்படுத்தினார். அதாவது ஒரு இனத்தின் விகிதாசாரம் அதிகரிக்கும் போது , குறைவடையும் இனத்தை சமநிலைப்படுத்த வெளிநாட்டில் இருந்து , குறைவடையும் இனத்தவரில் ,  சிங்கப்பூரை வளமாக்கக் கூடிய கல்வியாளர்களை வரவழைத்து , குடியுரிமை கொடுப்பதை முறைமையாக்கினார்.

நீங்கள் மேலே உள்ள  அட்டவணையில் அதை காண முடியும்.

உதாரணமாக சீனர்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்வது குறைவு. இந்தியர்கள் அல்லது மலாயர்களது எண்ணிக்கை அதிகமாகும் போது ஹாங்காங் (Hong Kong) , சீனா போன்ற பகுதிகளில் அறிவுசீவிகளை நாட்டுக்குள் வர வழி செய்து , இன பரம்பலை சமபடுத்தும் முறையை செயல்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தார் லீ. அதுபோலவே இந்திய (தமிழரும் அடங்குவர்) , மலேயருக்கும் கூட வந்து குடியுரிமை பெற முடிந்தது.

வளமே இல்லாத சிங்கப்பூரின் , வனமான பொருளாதாரத்துக்கு முக்கிய காரணம் , பொருளாதாரம் மட்டுமல்ல. இன – மத நல்லிணக்கமும்தான்.

உங்கள் பரம்பரை எதுவாகவும் இருக்கட்டும் , சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர்கள் சிங்கப்பூரர் என்றே நினைக்க வேண்டும். அப்படி எண்ண மனமில்லாதோர் தாங்கள் வந்த தேசத்துக்கு போகலாம் என்பது லீயின் எண்ணமாக இருந்தது.

அதனால்தான் பல இனங்களை கொண்ட சிங்கப்பூரர்களால் அதிபர்களாக முடிந்தது.
Tharman Shanmugaratnam is leading in the Singapore presidential election
அப்படியான எண்ணங்களை விதைத்தன் பலனாக இன்றைய அதிபராக
தர்மன் சண்முகரத்னத்துக்கு அனைத்து சிங்கை மக்களும் வாக்களித்து அரியனை ஏற்றியுள்ளார்கள்.

கண்ணீரோடு என்ன செய்வதென்றே தெரியாத நிலையோடு,  சிங்கப்பூரை பொறுப்பேற்ற லீயினது மன நிலையை வெளிப்படுத்தும் காணோளி (Video)

– என்னை வளர்த்த சிங்கப்பூர் வாழிய வாழியவே
சிங்கை சிற்பி லீ குவான்யூ மறைந்தாலும் அவரது எண்ணங்கள் மறையாது
ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.