சந்திரபாபு நாயுடு திடீர் கைது.. ஆந்திராவில் பதற்றம்..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் இன்று காலை 6 மணி அளவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நந்தியாலா போலீசார் கைது செய்தனர்.

அவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி இன்று அதிகாலை 3:30 மணியளவில் அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடுவிற்கு பாதுகாப்பு கொடுத்து வரும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிகாலை 5:30 மணி வரை அவரை யாரும் நெருங்க இயலாது என்று கச்சிதமாக தெரிவித்துவிட்டனர்.

எனவே இன்று 5.30 மணிக்கு அவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகனுக்கு அனுமதி மறுப்பு:

இதனை தொடர்ந்து யுவகளம் என்ற பெயரில் ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கும் அவருடைய மகன் லோகேஷ் தந்தையை சந்திப்பதற்காக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொடலாடாவிலிருந்து புறப்பட்டு சென்றார்.

அவரை தடுத்து நிறுத்திய போலீசார் நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டனர். இதனால் லோகேஷ் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.