டெல்லியில் இன்று தொடங்குகிறது G20 மாநாடு..41 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு..!

ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசினார்.

இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தும் பல தலைப்புகளை எங்களால் விவாதிக்க முடிந்தது எனவும் பதிவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய சிறிது நேரத்திலேயே வெள்ளை மாளிகை விரிவான கூட்டு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியா அமெரிக்கா இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு , இணைய பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட முன்மொழிவுகளுக்கான அழைப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா வந்துள்ள ஜி20 தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது.

பனீர் லபப்தார் (PANEER LABABDAR), சப்ஸ் கோர்மா(SUBZ KORMA), காஜூ மாதர் மக்கானா (KAJU MATAR MAKHANA), பென்னே இன் அர்ராபியாட்டா சாஸ் (PENNE IN ARRABIATATA SAUCE), குட்டு மால்புவா (KUTTU MALPUA), கேசர் பிஸ்தா ரஸ்மலாய்(KESAR PISTA RASMALAI), சூடான வால் நட் மற்றும் இஞ்சி புட்டு உள்ளிட்டவை உணவு பட்டியலில் இடம் பெற்றன.

இதனிடையே, ஜி20 உச்சி மாநாட்டினையொட்டி, பிரதமர் மோடி 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

இன்று, மொரீசியஸ், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதனைதொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் விருந்து மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இவற்றை தவிர, கனடா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய, G20 மாநாட்டின் முக்கிய நோக்கமே, பொருளாதாரத்தை மையப்படுத்தி பொருளாதார பின்னடைவை சரி செய்வது தான்.

இவற்றில், பேரியல் பொருளாதாரம் (macro economics) பற்றிய விஷயங்கள் குறித்து மட்டுமே விவாதங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும்.

இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடப்பதால், இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, திறன்மிக்க மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்துகொள்ள மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.