மகளிர் இலவச பேருந்துக்கு எதிர்ப்பு… பெங்களூருவில் திடீர் பந்த்

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ளது போல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சக்தி திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்து துறை மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சக்தி திட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள் கிழமையான இன்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

நள்ளிரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கு தனியார் பேருந்து சங்கங்கள், ஆட்டோ உள்ளிட்ட 32 சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கூடுதலாக 500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக கர்நாடகா போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.