கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மை வெளிவர வேண்டும்! – நீதி அமைச்சர் விஜயதாஸ கருத்து.

“முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த விடயத்தில் அரசு அக்கறையுடன் செயற்படுவதனால்தான் அகழ்வாய்வுக்கென நிதியையும் ஒதுக்கியுள்ளது.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த புதைகுழியிலிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலும், தடயப் பொருட்கள் குறித்தும் தற்போது என்னால் கருத்துரைக்க முடியாது.

அதேவேளை, அகழ்வாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா அல்லது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் அடுத்தகட்ட பகுப்பாய்வு நடவடிக்கைகள் என்னவென்று நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். எனினும், இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும்.” – என்றார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. நாள்தோறும் விடுதலைப்புலி போராளிகளின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படுவதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.