மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகுவாரா ரணில்?

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்படலாம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

‘மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும்’ – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராகி ஜனாதிபதி வேட்பாளராக வரலாம்.

ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே முன்னிறுத்துவது எமது நோக்கமல்ல. ஜனாதிபதித் தேர்தல் வரும்போது நாட்டு மக்கள் எப்படிப்பட்ட வேட்பாளரை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கணிக்க முடியாது. அதற்கமைய, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். அந்த வேட்பாளர் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக இருப்பார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.